கரிம ஊக்கப் புள்ளிகளுக்காக (carbon credits) சிங்கப்பூர் மேற்கொண்டுவரும் தேடுதல் சூடுபிடித்துள்ளது. இங்குள்ள நிறுவனங்கள் ஆப்பிரிக்க நாடான கானாவில் இது தொடர்பான வாய்ப்புகளைக் குறிவைத்துள்ளன.
கரிம வரி செலுத்தவேண்டிய சிங்கப்பூர் நிறுவனங்கள், தங்களின் வரிப் பணத்தைக் குறைப்பதற்குக் கரிம ஊக்கப் புள்ளிகள் பெற கானாவைத் தற்போது நாட முடியும். நிறுவனங்கள் நாடக்கூடிய மற்றொரு நாடு பாப்புவா நியூ கினி.
கானாவுக்கு கரிம ஊக்கப் புள்ளிகள் தொடர்பில் முதன்முதலாக வர்த்தகப் பயணம் ஒன்றை வர்த்தக, தொழில் அமைச்சு ஜூலை மாதம் வழிநடத்தியது. அதில் சிங்கப்பூரில் இயங்கிவரும் 22 நிறுவனங்கள் பங்கேற்றன.
கானாவில் கரிம ஊக்கப் புள்ளிகளை அனைத்துலகச் சந்தைக்கு வழங்கக்கூடிய திட்டங்கள் எரிசக்தி, போக்குவரத்து, வனவியல் துறைகளில் உள்ளன.
இந்நிலையில், விறகு அடுப்புகளுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அடுப்புகளைப் பயன்படுத்தும் சமையல் அடுப்புத் திட்டங்களைச் சில திட்ட மேம்பாட்டாளர்கள் விரும்புவதாகவும் அவற்றின் அடிப்படையில் சிங்கப்பூர் நிறுவனங்களுக்குக் கரிம ஊக்கப் புள்ளிகளை விற்க எண்ணியுள்ளதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்து வந்தது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வாக மின்சார வாகனங்களையும் அவர்கள் கருத்தில் கொண்டுள்ளனர்.