செயற்கை நுண்ணறிவு, உலகமயமாக்கல் அறிவிப்புகளுக்கு வர்த்தகர்கள் வரவேற்பு

செயற்கை நுண்ணறிவு, உலகமயமாக்கல் அறிவிப்புகளுக்கு வர்த்தகர்கள் வரவேற்பு

2 mins read
7be93611-d90f-4f17-8fe8-c42a80205a89
வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 40 விழுக்காடு வரிச் சலுகை வர்த்தகச் செலவுகளை ஓரளவு குறைக்க உதவும் என்று சில்லறை வர்த்தகர் சங்கம் கூறியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் உலகமயமாக்கல் திட்டங்களுக்கு வர்த்தகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் சில்லறை வர்த்தகர் சங்கத் தலைவர் எர்னீ கோ கூறுகையில், ஊழியர்களுக்கான பயிற்சி மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களும் ஊழியர்களின் வேலைகளைத் தக்க வைத்துக்கொள்ளவும் உற்பத்தித்திறனை உயர்த்தவும் உதவும் என்றார்.

“இருப்பினும், செயற்கை நுண்ணறிவைக் கடைப்பிடிப்பதில் ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்குமாறு சில்லறை வர்த்தகர்களைக் கேட்டுக்கொள்வது கடினம். காரணம், செயற்கை நுண்ணறிவுத் திறன்களால் பலன் கிடைக்க நாளாகும்,” என்றார் அவர்.

“பல சில்லறை வர்த்தகர்கள் தங்களை தக்கவைத்துக்கொள்ள செலவுகளுடன் போராட வேண்டிய நிலை உள்ளது. மேலும், உள்ளூர் ஊழியர்கள் இந்தத் துறையைத் தவிர்க்கிறார்கள். அதனால், அதிகரிக்கும் செலவுகளை வாடிக்கையாளர்களே சுமக்கக்கூடும்,” என்றும் திரு கோ கூறினார்.

அதேநேரம், அறிவிக்கப்பட்டுள்ள 40 விழுக்காடு நிறுவன வரிச் சலுகை வர்த்தகச் செலவுகளை ஓரளவு குறைக்கும் என்றார் அவர்.

இந்நிலையில், ஊழியர்களை அதிகமாகக் கொண்டிருக்கும் நிறுவனங்கள், வெளிநாட்டு ஊழியர் நியமனச் செலவு அதிகரிக்கும் என்று கவலை தெரிவித்துள்ளன.

காரணம், 2027ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த அதிகச் செலவாகும்.

‘எம்ப்ளாய்மண்ட் பாஸ்’ வேலைக்குத் தகுதி பெறுவதற்கான குறைந்தபட்ச சம்பளம் $5,600லிருந்து $6,000ஆகவும் ‘எஸ்-பாஸ்’ தகுதி பெறுவதற்கான குறைந்தபட்ச சம்பளம் $3,300லிருந்து $3,600ஆகவும் அடுத்த ஆண்டு அதிகரிக்கப்பட உள்ளன.

புதிய சம்பள வரம்பை பிரதமர் லாரன்ஸ் வோங் தமது வரவுசெலவுத் திட்ட உரையில் அறிவித்தார்.

உள்ளூர் ஊழியரணியின் அடித்தளமாக சிங்கப்பூரர்கள் இருப்பதை உறுதிசெய்யும் அதேநேரம் வெளிநாட்டுத் திறன்களுக்கும் நிபுணத்துவத்திற்கும் சிங்கப்பூர் தொடர்ந்து கதவுகளைத் திறந்து வைத்திருக்கும் என்ற அடிப்படையில் பிரதமரின் அறிவிப்பு அமைந்தது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான செலவு அதிகரிக்கும்போது பல்வேறு நிறுவனங்கள் விலைகளை ஏற்ற வேண்டியது வரும் என்று சிங்கப்பூர் உணவகச் சங்கத்தின் தலைவர் (RAS) பெஞ்சமின் போ கூறியுள்ளார்.

உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதில் உணவகங்கள் சிரமத்தை எதிர்நோக்குவதால் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதாகக் கூறும் திரு பெஞ்சமின், வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுக்க நேர்ந்தால் உணவு விலையில் அதன் தாக்கம் இருக்கும் என்றார்.

வெளிநாடுகளில் கிளை பரப்பும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அதிகமான மானியங்களும் வரிக் கழிவுகளும் வழங்குவதோடு வலுவான நிதி ஆதரவும் வழங்கப்படும் எனவும் பிரதமர் வோங் அறிவித்துள்ளார். இந்த உலகமயமாக்கல் நடவடிக்கை சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அனைத்துலக வளர்ச்சிக்கு முயற்சி எடுக்க உதவும் என வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்