சிங்கப்பூரைச் சேர்ந்த பத்து நிறுவனங்கள் தயாரித்த 50க்கும் மேற்பட்ட உணவுப் பொருள்கள், சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற ‘சவூதி - சிங்கப்பூர் காஸ்ட்ரோனமி’ நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஹலால் சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் அளிப்பதன் தொடர்பில், 2023ல் சவூதி அரேபியா, சிங்கப்பூர் இடையே கையெழுத்தான புரிந்துணர்வுக் குறிப்பிற்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சி இது.
சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தால் (முயிஸ்) சான்றளிக்கப்பட்ட ஹலால் உணவு வகைகள் சவூதிச் சந்தைக்குச் செல்வதற்கும் சவூதிப் பொருள்கள் சிங்கப்பூருக்கு வரவும் வழிவகுத்தது அந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு.
சிங்கப்பூர் உணவு உற்பத்தியாளர் சங்கத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் உணவு உற்பத்தி நிறுவனங்கள் காட்சிப்படுத்திய நல்லெண்ணெய், உடனடியாக சமைக்கும் கறி வகைகள், பால், மசாலாப் பொருள்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மத்திய கிழக்கு நாடுகளின் கவனத்தை ஈர்த்தன.
“இந்த நிகழ்ச்சி சிங்கப்பூர் உணவுப் பொருள்களின் புதுமையையும் தரத்தையும் எடுத்துக்காட்டி, அதன் சந்தை விரிவாக்கத்திற்கு வழிவகுத்துள்ளது,” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி.
இவ்வகை வாய்ப்புகள் வணிகங்களை விரிவாக்கி, வலுப்படுத்த உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவிப்பதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சருமான அவர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா, சிங்கப்பூரின் இருதரப்பு உறவு வலுப்பெறுவது, பலவகையில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்று அப்பதிவில் அவர் கூறினார்.
புரிந்துணர்வுக் குறிப்பு, உயர்தர உணவுப் பொருள்களின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு வழிவகுத்ததுடன் இந்நிகழ்வுக்கும் வித்திட்டதாகக் கூறிய சவூதி அரேபியாவுக்கான சிங்கப்பூர் தூதர் பிரேம்ஜித் சதாசிவன், “உணவு, மக்களை நெருக்கமாக்குவதுடன் பண்பாட்டு ரீதியாகவும் இணைக்கிறது,” என்றார்.

