தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலவசப் புற்றுநோய்ப் பரிசோதனைக்குப் பதிந்துகொள்ள அழைப்பு

2 mins read
15da93a7-17df-4995-a3fd-e9e0be656023
சிங்கப்பூரில் மார்பகப் புற்றுநோயால் ஆண்டுக்கு 2,000க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொருளியல் ரீதியாகத் தடுமாறும் சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் மூன்று விதமான புற்றுநோய்களுக்கான பரிசோதனை இலவசமாக வழங்கப்படுகிறது.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் அவற்றுக்கான பதிவுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பதிவு செய்துகொள்வோர் பெருங்குடல், மார்பகம், கருப்பைவாய் ஆகிய புற்றுநோய்ப் பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ளலாம்.

முன்னதாகவே பரிசோதனை செய்வதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகச் சிகிச்சை நாடி அவற்றிலிருந்து மீண்டு வரமுடியும். அதன் காரணமாகவே இந்த இலவசப் புற்றுநோய்ப் பரிசோதனை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது

பெருங்குடல் புற்றுநோய்ப் பரிசோதனைக்கு மார்ச் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை பதிந்துகொள்ளலாம் என்று 365 புற்றுநோய்த் தடுப்புச் சங்கம் தெரிவித்துள்ளது.

மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனைக்கு மார்ச் மாத இறுதிக்குள் பதிந்துகொள்ளலாம். அதேபோல் கருப்பைவாய்ப் பரிசோதனைக்கு மார்ச் 15க்குள் பதிந்துகொள்ளலாம்.

இந்தப் பரிசோதனைகளுக்குத் தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் ‘365 புற்றுநோய்த் தடுப்புச் சங்கத்தின்’ இணையப்பக்கத்தில் பதிந்துகொள்ளலாம்.

பிறப்புறுப்பு, வயிறு, நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றுக்கான புற்றுநோய்ப் பரிசோதனை இவ்வாண்டில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

45 வயது முதல் 70 வயதுள்ள சிங்கப்பூரர்கள் நீல அல்லது ஆரஞ்சு நிற சாஸ் (Chas) அட்டை வைத்திருந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் பெருங்குடல் புற்றுநோய்ப் பரிசோதனை செய்யாமல் இருந்தால் அவர்கள் அப்பரிசோதனைக்குத் தகுதிபெறுவார்கள். பொது உதவி அட்டை வைத்திருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

மேல்விவரங்களுக்கு https://www.365cps.org.sg/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

சிங்கப்பூரில் பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 1,400 பேர் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர். சிங்கப்பூரில் ஆக அதிகமாகப் பாதிக்கப்படும் புற்றுநோய்ப் பட்டியலில் அது இரண்டாவது இடத்தில் உள்ளது.

மார்பகப் புற்றுநோயால் ஆண்டுக்கு 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்