சிங்கப்பூர்ப் பூங்கா விழா பத்தாவது முறையாக நடப்பதைக் குறிக்கும் வகையில், புதிய ஆர்க்கிட் கலப்பின மலர் ஒன்றுக்கு அவ்விழாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதற்கான அறிவிப்பைப் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் தற்காப்பு அமைச்சருமான சான் சுன் சிங் ஜூலை 3ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
கரையோரப் பூந்தோட்டத்தில் நடைபெறும் அனைத்துலகப் பூங்கா, மலர்க் கண்காட்சியில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
‘தி மெடோ’ (The Meadow) பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிற ஆர்க்கிட் மலருக்கு, ‘பெப்பிலியோனான்தே சிங்கப்பூர் கார்டன் ஃபெஸ்டிவல்’ (Papilionanthe Singapore Garden Festival) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இவ்விழாவை இணைந்து நடத்தும் தேசியப் பூங்காக் கழகமும் (National Parks Board) கரையோரப் பூந்தோட்டங்களும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில், இந்த மலரின் பல்லினப் பண்பாட்டுச் இனச்சேர்க்கைப் பின்னணியும், சிங்கப்பூரின் தேசிய மலரான ‘பெப்பிலியோனான்தே மிஸ் ஜோவாகிம்’ (Papilionanthe Miss Joaquim) மலரிலிருந்து இது உருவான மரபுவழியும், இவ்விழாவின் அனைத்துலக உணர்வையும் உள்ளூர் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துவதாக இரு அமைப்புகளும் கூறின.
2026ஆம் ஆண்டின் இந்தப் பூங்கா விழாவில் ‘புளோரல் விண்டோஸ் டு த வோர்ல்ட் சாம்பியன்ஷிப்’ உலகளாவிய போட்டியும் இடம்பெற்றது. அதில், 17 நாடுகளின் மலர் அலங்காரக் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

