சிங்கப்பூர் பொது மருத்துவமனை தனது அவசரச் சிகிச்சைப் பிரிவை ஜனவரி 18ஆம் தேதி முதல் புதிய கட்டடத்திற்கு மாற்ற இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் காலை 7 முணி முதல் புதிய கட்டடத்தில் அவசரச் சிகிச்சை பிரிவு இயங்கும் என்று அந்த மருத்துவமனை திங்கட்கிழமை (ஜனவரி 12) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
புதிய கட்டடம், எஸ்ஜிஎச் புளோக் 1ல் தற்போது இயங்கிவரும் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு அருகிலேயே உள்ளதாக அது தெரிவித்தது.
அவசரச் சிகிச்சை நாடுவோர் எண் 1 ஹால்பிட்டல் பொலவர்ட் என்னும் முகவரில் உள்ள புதிய எஸ்ஜிஎச் அவசர/தேசிய நரம்பியல் கழகக் (NNI) கட்டடத்தின் மூன்றாவது தளத்திற்குச் செல்லுமாறு மருத்துவமனை கேட்டுக்கொண்டுள்ளது.
வாகனத்தில் வந்து அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு இறங்கும் இடத்தில் மாற்றமில்லை.
பொதுப் போக்குவரத்தில் சிங்கப்பூர் பொது மருத்துவமனை செல்வோர் ஊட்ரம் பார்க் எம்ஆர்டி நிலையத்தில் இறங்கி, நீலநிற இடைவழி வாகனத்தில் ஏறலாம். எம்ஆர்டி நிலையத்தின் வெளிவழி எண் 6 மற்று 7ல் அந்த வாகனங்கள் கிடைக்கும்.
அவசரச் சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டிருப்பது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையிடமும் தனியார் ஆம்புலன்ஸ் சேவை நிறுவனங்களிடமும் பொதுப் போக்குவரத்து நிறுவனங்களிடமும் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளது.

