சிங்கப்பூரில் நடக்கும் ஃபார்முலா 1 கார் பந்தயத்தை ஐந்து சமூக நடுவங்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21, 22ஆம் தேதிகளில் நமது தெம்பனிஸ் நடுவம், ஹார்ட்பீட்@பிடோக், கியட் ஹொங் சமூக மன்றம், பீஷான் சமூக மன்றம், உட்லண்ட்ஸ் கேலக்ஸி சமூக மன்றம் ஆகிய ஐந்து சமூக நடுவங்களில் ஃபார்முலா 1 கார் பந்தயம் ஒளிபரப்பப்படும் என்று மக்கள் கழகம் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டது.
சிங்கப்பூரில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் கிராண்ட் ப்ரீ மிக முக்கியமான ஒன்று. அதை நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் குடியிருப்பு வட்டாரத்தில் பார்த்து மகிழ்வது ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். மேலும் சிங்கப்பூரின் தேசிய கீதம் ஒலிக்கும்போது மக்களின் தேசிய பற்றைக் காணமுடியும் என்று மக்கள் கழகத்தின் தலைவர் பேட்ரிக் டான் தெரிவித்தார்.
செப்டம்பர் 21ஆம் தேதி கார் பந்தயத்தை தொடங்குவதற்கான தகுதி ஓட்டம் நடக்கும். அது இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடக்கும்.
செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 8 மணிக்கு கார் பந்தயம் நடக்கும். அன்று மாலை 6 மணி முதல் மக்கள் பந்தயத்தைக் காண அனுமதிக்கப்படுவார்கள்.

