நடைமுறைகள் அடிப்படையில் சிங்கப்பூர் இயங்குகிறது: பிரதமர் லாரன்ஸ் வோங்

நடைமுறைகள் அடிப்படையில் சிங்கப்பூர் இயங்குகிறது: பிரதமர் லாரன்ஸ் வோங்

4 mins read
4938952d-0aac-490d-8a58-1723b3fdf538
சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்டத்தின்போது, ஆர்க்கிட் மலருக்குச் சிறப்புப் பெயர்சூட்டும் நிகழ்வில் (இடமிருந்து) தேசியப் பூங்காக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் புவே யோக், வாழத்தகுந்த நகரங்களுக்கான மையத்தின் நிர்வாக இயக்குநர் ஹியூ லிம், பிரதமர் லாரன்ஸ் வோங், தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிம் எங் ஹுவீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

கருத்தியல்களைவிட நடைமுறைச் செயல்பாடுகளை ஒட்டியே சிங்கப்பூர் செயல்படுவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

“சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் சிறந்தவற்றை அளிப்பதில் கவனம் செலுத்துவதே தலையாய நோக்கம்,” என்று கூறிய அவர், “வெல்வேறு அணுகுமுறைகளை முயற்சி செய்து, சரியானவற்றைத் தக்கவைத்துக்கொண்டு, பலனளிக்காதவற்றை மாற்றுகிறோம்,” என்றார்.

சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்டத்தின் இரண்டாம் நாள் (ஜூன் 15) அமர்வில் கலந்துகொண்டு பிரதமர் சிறப்புரையாற்றினார்.

நகரமைப்புத் திட்டம் நிலையானதன்று என்றும் அது தொடர் கற்றல், மேம்பாடுகளால் அமையவேண்டும் என்றும் அவர் சொன்னார். நகரங்கள், கொள்கை அடித்தளங்களை இறுகப்பற்றும் அதேவேளையில், புதிய சிந்தனைகளையும் ஏற்பது வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“சமரசங்கள் தவிர்க்கமுடியாதவை,” என்று சுட்டிய திரு வோங், “சிங்கப்பூரின் பயணம் நடைமுறையில் சமரசங்கள் எவ்வளவு கடினமாக இருக்கக்கூடும் என்பதையும் விளக்குகிறது,” என்றார்.

“பெரும்பாலும் நிலவும் எளிய வகைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது சிங்கப்பூர்,” என்றும் அவர் கூறினார்.

“சிங்கப்பூர் மிகக் குறைவான அரசாங்கத் தலையீட்டுடன் செயல்படும் வெளிப்படையான சந்தை, வர்த்தக நடைமுறை கொண்ட நாடுகளில் ஒன்று எனப் பலர் வரையறுப்பதுண்டு. ஆனால், பல துறைகளில் அரசாங்கம் தீவிரப் பங்கு வகிப்பது அவர்களுக்கு வியப்பளிக்கிறது.

“சிங்கப்பூரின் பொதுத்துறை மிகப்பெரியதாக இருப்பதாகப் பலர் கருதுகின்றனர். ஆனால், அரசாங்கத்தின் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது. இது, வளர்ந்த பொருளியல் கொண்ட பல நாடுகளைவிடக் குறைவு. இதுவும் பலரை வியப்படையச் செய்கிறது,” என்றார் பிரதமர் வோங்.

சிங்கப்பூரின் அணுகுமுறைகளை விளக்க மூன்று முக்கிய எடுத்துக்காட்டுகளையும் குறிப்பிட்டு அவர் பேசினார்.

பொருளியல் வளர்ச்சியை முக்கியத் தூணாகக் கருதுவதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் நல்வாழ்வைக் கணக்கிட இயலாது என்பதை உணர்ந்துள்ளதாகத் திரு வோங் சொன்னார்.

கரையோரப் பூந்தோட்டங்கள், 24 கிலோமீட்டர் பசுமை ரயில் பாதை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, இயற்கை, கலாசாரப் பின்னணிகளுக்குச் சிங்கப்பூர் முக்கியத்துவமளிப்பதை அவர் விளக்கினார்.

சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்களில் 80 விழுக்காட்டினர் பொது வீடமைப்புத் திட்டங்களில் வசிப்பதைச் சுட்டிய அவர், வளங்களைத் திறமையாகப் பகிர்ந்தளிப்பதில் முனைப்புடன் செயல்படுவதை விளக்கினார்.

‘ஏஜ் வெல்’ திட்டத்தைக் குறிப்பிட்ட பிரதமர், சிங்கப்பூர் பெரும்பாலும் தீவிரமான அரசுத் திட்டமிடலுக்காக அறியப்பட்டாலும், சமூகப் பங்களிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதைச் சுட்டினார்.

தொடர்ந்து, “நேற்றைய தீர்வுகள் நாளையும் பலனளிக்கும் என்று கருதுவதில்லை,” என்றும், “சூழ்நிலைகள் மாறும்போது, தொடர்ந்து கற்றுக்கொள்கிறோம், அதற்கேற்பத் தகவமைத்துக்கொள்கிறோம், புதுமைகளைப் புகுத்துகிறோம்,” என்றும் திரு வோங் சொன்னார்.

மக்களின் அன்றாட வாழ்வை மேம்படுத்த மின்னிலக்கச் சேவைகளைப் பயன்படுத்துவது, தொழில்நுட்பப் பயன்பாட்டில் கவனம், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் திட்டம் வகுப்பது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய திட்டங்கள் அறிமுகம்

உலக அளவில் நிலவும் நிச்சயமற்ற நிலையைச் சாதாரண மக்கள் உணரத் தொடங்கியுள்ளதாகக் கூறிய பிரதமர் வோங், “நகரங்கள் மனிதகுலச் சவால்களைச் சந்திப்பதில் முதல் நிலையில் உள்ளன. தொழில்நுட்பப் பயன்பாட்டுடன் மக்கள் பின்தங்காமல் இருப்பதை உறுதிசெய்து, பொருளியலை வளர்ப்பது, வெவ்வேறு பின்னணிகொண்ட மக்களை ஒன்றிணைப்பது, நகரங்களை வாழத்தகுந்ததாக வைக்கும் அதே வேளையில் பெருகிவரும் உள்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஆகியவை தொடர்பான சவால்களை அனைத்து நகரங்களும் சந்திக்கின்றன,” என்றார்.

நகரின் அளவு, மேம்பாட்டு நிலை என எந்த வேறுபாடுகளும் இன்றி அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சுட்டிய திரு வோங் இரு முக்கியத் திட்டங்களையும் அமர்வில் அறிவித்தார்.

உலக நகரங்களின் கற்றல், கருத்துப் பரிமாற்றங்களுக்கும், உலக நகர மேயர்கள் வெளிப்படையாக உரையாடவும் தளம் அமைக்கும் வகையில் ‘மேயர்கள் சிறப்புக் குழுக் கட்டமைப்பு’ அறிமுகம் கண்டுள்ளது.

மேயர்கள் சிறப்புக் குழு (the Mayoral Fellowship), ஆய்வுக்கான சிறப்புக்குழு (The Research Fellowship), நகரத் தலைவர்கள் சிறப்புக்குழு (Urban Leaders’ Fellowship) ஆகிய மூன்றையும் இது உள்ளடக்கும்.

அழைப்பின் பேரில் பங்கேற்கும் இத்திட்டத்தின் முதலாம் ஆண்டில், இந்தியாவின் ஆக்ரா நகர மேயர் ஹேமலதா திவாகர் உட்பட ருமேனியா, ருவாண்டா, தென்னாப்பிரிக்கா என நான்கு நாடுகளைச் சேர்ந்த நகர மேயர்கள் பங்கேற்கின்றனர். மேலும் சிலர் சிறப்பு வருகையாளர்களாகப் பங்கேற்பர்.

இவ்வாண்டுக்கான லீ குவான் யூ உலக நகரப் பரிசு வென்ற லண்டன் உட்பட உலகின் பல நகரங்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய அனுபவங்கள் இருப்பதைச் சுட்டிய பிரதமர் வோங், “இந்த கருத்துப் பரிமாற்றங்கள் புதிய சிந்தனைகளைத் தூண்டி, நீடித்த உறவை உருவாக்குவதுடன் நீடித்த ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என நம்புகிறேன்,” என்றார்.

மேலும், நகர மறுசீரமைப்பு ஆணையமும், வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் இணைந்து ‘லியு தாய் கெர் கௌரவப் பேச்சாளர் (‘Liu Thai Ker Distinguished Speaker Series’) தொடரை வழிநடத்தும். இவ்வாண்டின் பிற்பாதியில் நடைபெறவுள்ள இத்தொடர், மக்களை முன்னிறுத்தும் நகர வடிவமைப்பை நோக்கிய பயணத்துக்கு ஆதரவளிக்கும்.

குறிப்புச் சொற்கள்