தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1எம்டிபி நிதியிலிருந்து மீட்கப்பட்ட ஏறத்தாழ 40 மில்லியன் ரிங்கிட்டைச் சிங்கப்பூர் மலேசியாவிடம் ஒப்படைத்தது

2 mins read
2fae56a8-ebce-442a-b422-a99007c1f85f
1எம்டிபி வழக்கு உலகின் மிகப்பெரிய நிதி குற்றங்களில் ஒன்றாக உள்ளது. - கோப்புப் படம்

கோலாலம்பூர்: தற்போது தலைமறைவாக இருக்கும் ‘ஜோ லோ’ எனப் பரவலாக அறியப்படும் நிதி நிறுவனத் தலைவர் லோ டேக் ஜோவுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சொந்தமான கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துகள், 1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1எம்டிபி) சொத்து மீட்பு அறக்கட்டளை கணக்கிற்கு வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் சிங்கப்பூரின் வர்த்தக விவகாரத் துறை  உதவியை வழங்கியுள்ளதாக மலேசியாவின் ‘த ஸ்டார்’ வெளியிட்ட செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது.

“மீட்கப்பட்ட சொத்துக்கள், மொத்தம் 8.57 மில்லியன் அமெரிக்க டாலர் (11 மில்லியன் வெள்ளி) பெறுமானமுள்ளவை.  ஜோ லோவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான மற்ற கணக்குகளிலிருந்தும் பணம், எதிர்காலத்தில் மீட்டெடுக்கப்பட உள்ளது,” என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், புதன்கிழமை (செப்டம்பர் 10) அறிக்கை ஒன்றின்வழி தெரிவித்துள்ளது.

இந்த மீட்பு, அண்மையில் ஜே பி மோர்கன் சேஸ் & கோ நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட 330 மில்லியன் அமெரிக்க டாலர் (1.4 பில்லியன் ரிங்கிட்) உடன்படிக்கையுடன் சேர்த்து, 1எம்டிபி வழக்கிலிருந்து மலேசியாவால் மீட்கப்பட்ட மொத்த சொத்துகளின் அளவை 31.19 பில்லியன் ரிங்கிட்டிற்கு உயர்த்தியுள்ளது என்று ஊழல் தடுப்பு ஆணையம் கூறியது.

கடந்த ஆண்டு ஜூன் 26ல் ஜோ லோவின் 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சொத்துக்களை மீட்பதற்கு அமெரிக்க நீதித்துறை வழிவகுத்தது.

“மொத்தத்தில், ஜோ லோவுடன் தொடர்புடைய 1.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை அமெரிக்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க பங்கு ஏற்கெனவே மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது,” என்று ஊழல் தடுப்பு ஆணையம் கூறியது.

1எம்டிபி வழக்கு உலகின் மிகப்பெரிய நிதிக் குற்றங்களில் ஒன்றாக உள்ளது.

“முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து நிதிகளையும் சொத்துகளையும் திரும்பக் கொண்டுவரவும் சம்பந்தப்பட்ட எல்லாத் தனிநபர்களும் நிறுவனங்களும் பொறுப்பேற்பதை உறுதி செய்யவும் மலேசிய அரசாங்கம் தனது கடப்பாட்டைத் தெரிவித்தது,” என்றும் ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்