புதிய தயார்நிலை மின்சார ஆலை சிங்கப்பூரில் தொடக்கம்

2 mins read
9d23a6db-3ee7-40d4-b2d5-80a1307ef4d3
மெராண்டி பவர் மின்சார ஆலை 25 நிமிடங்களில் முழுமையாகச் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டது. - படம்: மெராண்டி பவர்
multi-img1 of 2

சிங்கப்பூர் தயார்நிலையில் உள்ள மின்சார ஆலையை அதிகாரபூர்வமாகத் திறந்துள்ளது. சிங்கப்பூரில் ஒருவேளை மின்சார விநியோகம் தடைப்பட்டால் ஒருசில நிமிடங்களுக்குள் தயார்நிலை ஆலையால் முழுமையான மின்சாரத்தை வழங்க முடியும்.

எரிசக்திச் சந்தை ஆணையத்தின்கீழ் உள்ள மெராண்டி பவர் பிரிவு அமைத்துள்ள விசைப்பொறி, ஒட்டுமொத்தமாக 682 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது.

அதன் மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நாலறை கழக வீடுகளுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை விநியோகம் செய்ய முடியும்.

மின்சார ஆலை செயல்படும்போது பத்து நிமிடங்களுக்குள் மின்சாரத்தை விநியோகம் செய்ய முடியும்.

மின்சாரத்துக்கான தேவை அளவுக்கு அதிகமாக இருக்கும்போதோ மின்சார விநியோகம் துண்டிக்கப்படும்போதோ தயார்நிலை ஆலையின் சேவை மிகவும் முக்கியமாகத் தேவைப்படும்.

எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டான் சீ லெங் புதன்கிழமை (அக்டோபர் 29) மின்சார ஆலையைத் திறந்துவைத்தார். ஈராண்டுக்குமுன் ஆலைக்கான நிலம் திருத்தும் நிகழ்ச்சியில் டாக்டர் டான் கலந்துகொண்டார்.

புதிய மின்சார ஆலை அடிப்படையில் எரிவாயுவைக் கொண்டு செயல்பட்டாலும் 30 விழுக்காடு வரை ஹைட்ரஜனையும் அதனால் பயன்படுத்த முடியும்.

சிங்கப்பூரில் மின்சாரத் தேவை அதிகரிக்கும் வேளையில், நிலையான, நம்பகமான முறையில் மின்சாரம் தொடர்ந்து விநியோகம் செய்யப்படுவதைப் புதிய தயார்நிலை ஆலை உறுதிசெய்கிறது என்றார் மனிதவள அமைச்சருமான டாக்டர் டான்.

சிங்கப்பூரில் மின்சாரம் தற்போது கூட்டுச் சுழற்சி வளிமச் சுழலிகள் (Combined Cycle Gas Turbines) மூலம் உற்பத்தியாகிறது.

ஆனால் தேவை ஏற்படும்போது அத்தகைய வளிமச் சுழலி மூலம் உடனடியாக மீண்டும் செயல்பட முடியாது.

செயல்படாத கூட்டுச் சுழற்சி வளிமச் சுழலியை மீண்டும் செயல்படுத்த எப்படியும் 14 மணி நேரம் வரை தேவைப்படும் என்ற டாக்டர் டான், மெராண்டி பவர் அமைத்திருக்கும் புதிய தயார்நிலை மின்சார ஆலை 25 நிமிடங்களுக்குள் முழுமையாகச் செயல்பட முடியும் என்றார்.

சூரியசக்தி, காற்றாலை ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் உள்ள சவால்களையும் புதிய ஆலை சமாளிக்க உதவுகிறது என்றார் டாக்டர் டான்.

இரண்டுமே பருவநிலைக்கு ஏற்ப மாறக்கூடியவை என்பதால் மின்சார விநியோகத்திலும் தடங்கல் ஏற்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்