சிங்கப்பூரில் குறைந்த தனிநபர் நீர் பயன்பாடு; நாளொன்றுக்கு 141 லிட்டர்

சிங்கப்பூரில் குறைந்த தனிநபர் நீர் பயன்பாடு; நாளொன்றுக்கு 141 லிட்டர்

2 mins read
54dc8185-eef2-461c-82a7-93aaa62e7b7f
மார்ச் 17ஆம் தேதி நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் உலக நீர் தினக் கொண்டாட்டத்தில் இடம்பெற்ற கண்காட்சியைத் தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சான் சுன் சிங் (இடது), பொதுப் பயனீட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஓங் டிஸே-சின் ஆகிய இருவரும் பார்வையிட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த ஆண்டு ஒவ்வொரு சிங்கப்பூர்க் குடியிருப்பாளரும் நாளொன்றுக்கு 141 லிட்டர் நீரைப் பயன்படுத்தியதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.

மேலும், 2024ஆம் ஆண்டில் இருந்த 142 லிட்டரை விடவும் ஒரு லிட்டர் குறைவு என அது குறிப்பிட்டது.

சன்டெக் சிட்டி ஏட்ரியத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) நடைபெற்ற வருடாந்தர தண்ணீர்ச் சேமிப்பு பிரசாரத்தைத் தொடங்கியபோது இவ்வாறு அது கூறியது.

நீர் சேமிப்பு முயற்சிகளின் அவசியம்

இருப்பினும், தொடரும் நீக்குப்போக்கு வேலை முறை, உயர்ந்து வரும் வெப்பநிலை, சிறிய குடும்ப அமைப்பு ஆகியவை வீட்டு உபயோக நீர்ப் பயன்பாட்டை உயர்த்தும் அழுத்தத்தைத் தொடர்ந்து அளித்து வருவதாக அது கூறியுள்ளது.

2030ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூர்வாசி ஒருவரின் தினசரி நீர்ப் பயன்பாட்டை 130 லிட்டராகக் குறைக்கப் பசுமைத் திட்டம் 2030ன்படி சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த தனிநபர் நீர்ப் பயன்பாடு அளவு நாளொன்றுக்கு 141 லிட்டராகும்.

இது 2025, 2018, 2019, 2023 ஆகிய ஆண்டுகளில் பதிவாகியுள்ளது.

“குடியிருப்புகளில் தொடர்ந்து நீர்ச் சேமிப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது. அதே நேரத்தில், எதிர்காலத்தில் தண்ணீர்த் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ள வீட்டுத் தேவைக்கு அல்லாத பிற துறைகளில் நீர்ப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் இது வலியுறுத்துகிறது,” எனப் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.

சிங்கப்பூர் நீர்ச் சேமிப்புத் திட்டம்

வீடுகள் தண்ணீரைச் சேமிக்க மேலும் உதவும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று முதல் மூன்றுஅறை கொண்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் நீர்ச் சேமிப்பு முறைகளை மேற்கொள்ள உதவும் ஒரு புதிய திட்டத்தைக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் நீர்ச் சேமிப்புத் திட்டம் (SG water saver programme) என அழைக்கப்படும் இந்த முன்னோட்ட முயற்சியில், வீட்டு நீர்த் தணிக்கை சேவையை இலவசமாக வழங்குவது, நீர்க் கசிவைப் பழுதுபார்ப்பது, சரியாக வேலை செய்யாத குழாய்களை மாற்றுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அத்திட்டத்தின் மூலம் முதல் ஈராண்டுகளில் கிட்டத்தட்ட 1,500 வீடுகள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருடாந்தர நீர்ப் பிரசாரத்திற்கான தொடக்க விழாவில் பேசிய தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சான் சுன் சிங், நீரின் தரம், பயன்பாட்டை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள் அதிக ஆற்றல் கொண்டவையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் நீருக்கான தேவையை நிர்வகிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரின் நீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் இருந்தாலும், அத்தகைய தொழில்நுட்பம் எரிசக்தியைச் சார்ந்தே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்