தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரச்சினையுள்ள உலகிற்கு சிங்கப்பூர் ஒற்றுமையை உணர்த்தவேண்டும்: மூத்த அமைச்சர் லீ

2 mins read
9daf0239-d0b3-42ea-80f2-b1b13fbc8cdc
சி யுவான் சமூக மன்றத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பங்கேற்ற மூத்த அமைச்சர் லீ சியன் லூங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிச்சயமற்ற, பிரச்சினைகள் நிறைந்த உலகில், நாம் அனைவரும் ஒரே நாடாக ஒன்றிணைந்து பணியாற்றுவதன் மூலம் நம்மால் எதனையும் சமாளிக்க இயலும் என்பதைச் சிங்கப்பூர் உணர்த்த வேண்டும் என மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

சமூகப் பணியாற்றுவது, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அக்கறை செலுத்துவது போன்றவை ஒரே மக்களாகப் பணியாற்றுவதற்கான உதாரணங்கள் என்றார் திரு லீ.

அதற்கு, காம்கேர் சமூக ஆதரவுத் திட்டம், தமது குழுத்தொகுதியில் செயல்பட்டு வரும் ‘பேக்- டு-ஸ்கூல்’ திட்டம் போன்றவற்றை அவர் மேற்கோள் காட்டினார்.

“ஒருவருக்கு ஒருவர் இன்னும் அதிகமாக உதவி செய்யும்போது யாரும் தனித்துவிடப்பட்டதைப் போல உணரமாட்டார்கள். மாறாக, ஒன்றிணைந்து ஒரே மக்களாக இருப்பதாகவே ஒவ்வொருவரும் உணர்வர்,” என்றார் மூத்த அமைச்சர்.

சி யுவான் சமூக மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற்ற ‘சி யுவான் தினம் 2025’ நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசினார். அந்தச் சமூக மன்றம், அங் மோ கியோ குழுத்தொகுதியில் உள்ளது. திரு லீ, அந்தக் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்.

சி யுவான் சமூக மன்றத்தின் 10வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் அங் மோ கியோ, ஹவ்காங் வட்டாரங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 1,600 குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

‘பேக்-டு-ஸ்கூல்’ திட்டம் அந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக இடம்பெற்றது.

அங் மோ கியோ, ஹவ்காங் வட்டாரங்களைச் சேர்ந்த குறைந்த வருமானக் குடும்பங்களின் மாணவர்களுக்கு, படிப்பதற்குத் தேவையான பொருள்களை இலவசமாக வழங்குகிறது அந்தத் திட்டம்.

கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தத் திட்டத்தின் மூலம் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலனடைந்து வருகின்றனர்.

பள்ளிப் பிள்ளைகள் தங்களுக்குத் தேவையான பொருள்களைக் கடைகளுக்குச் சென்று வாங்குவதைப்போல பாவனை செய்யும் நடவடிக்கை அந்தத் திட்டத்தில் இடம்பெற்றது. நிதி தொடர்பான கல்வியறிவைக் குழந்தைகளுக்குப் புகட்டுவது அதன் நோக்கம்.

மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களைத் தேர்ந்து எடுக்க, போவென் உயர் நிலைப் பள்ளி, அங் மோ கியோவிலுள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த தொண்டூழியர்கள் வழிகாட்டி உதவினர்.

அந்தத் தொண்டூழியர்களுக்கு திரு லீ பாராட்டு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்