சமமின்மையைக் கையாள சிங்கப்பூரிடம் வரிகளையும் தாண்டி பல்வேறு உத்திகள் இருக்கின்றன என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
வீட்டுரிமைத் திட்டத்தின்வழி நிதி ஆதரவு வழங்குவது, அவ்வப்போது மத்திய சேமநிதியில் கூடுதல் நிரப்புத்தொகை போடுவது போன்றவை அத்தகைய உத்திகளில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். அதனால்தான் வருமானத்தைப் பொறுத்தவரை ஆகக்கீழ்நிலையில் இருக்கும் 20 விழுக்காட்டினருக்கும் குறிப்பிடத்தக்க சொத்துகள் இருப்பதாக திரு வோங் சுட்டினார்.
புதன்கிழமை (நவம்பர் 19) புளூம்பெர்க் புதிய பொருளியல் மாநாட்டின் இரவு விருந்து நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
“குறைந்த வருமானக் குழுவினருக்குக் கூடுதல் ஆதரவளிக்கவும் அவர்களை மேம்படுத்தவும் இவ்வாறு கொள்கைகளைத் தொடர்ந்து மறுசீரமைப்பது ஒரு வழி,” என்று கிளிஃபர்ட் பியரில் நடந்த நிகழ்ச்சியில் திரு வோங் குறிப்பிட்டார்.
ஆண்டுதோறும் நடந்துவரும் இந்த மாநாடு நவம்பர் 19லிருந்து நவம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
“மத்திய சேமநிதியும் நம்மிடையே உள்ளது. அது, ஓய்வுக்காலத்துக்கான ஒரு தனிநபரின் சேமிப்பாகும். அதில் அவ்வப்போது நாங்கள் கூடுதல் தொகையை நிரப்புகிறோம்,” என்று பிரதமர் வோங் விவரித்தார்.
புளூம்பெர்க் முதன்மை ஆசிரியர் ஜான் மிக்கல்துவெட் கேட்ட கேள்விக்கு திரு வோங் பதிலளித்தார். வருவாய் சமத்துவமின்மையைக் கணக்கிடும் குறியீடான கினி கோஎஃபிஷியென்ட் (Gini coefficient) சிங்கப்பூரில் குறைந்துள்ளபோதும், வெளிநாடுகளைச் சேர்ந்த செல்வந்தர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு வரும்போது சமத்துவமின்மை அதிகரிக்கக்கூடும் என்று மக்கள் உணர்கின்றனரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
சிங்கப்பூரின் கினி கோஎஃபிஷியென்ட் 2007ஆம் ஆண்டு ஆக அதிகமாகப் பதிவானது. ஆனால், அண்மைய ஆண்டுகளில் இந்தக் குறியீடு குறைந்திருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கம் வழங்கிவரும் நிதி ஆதரவு, படிப்படியான சம்பள உயர்வு முறை போன்ற கொள்கைகள் அதற்கான காரணங்களில் சில.

