செயற்கை நுண்ணறிவின் ஆற்றல் மீது சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சக காமன்வெல்த் நாடுகளுக்கு சிங்கப்பூர் உதவும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
தென்பசிபிக் பெருங்கடல் தீவு நாடான சமோவாவில் நடைபெற்ற காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் மீள்திறன்மிக்க மேலும் அதிக சமூகங்களை உருவாக்க அரசாங்கங்கள் மின்னிலக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்றார் அவர்.
“நமது பொருளியல் நன்மைக்காகவும் நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நாடுகளுடன் இணைந்து, குறிப்பாக சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நமது நடைமுறையிலும் பாதுகாப்பான, மீள்திறன் மிக்க வருங்காலத்திற்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் சிறிய நாடுகளுடனும் சிங்கப்பூர் இணைந்து பணியாற்றும்,” என்றார் திரு வோங்.
ஒத்துழைப்புக்கான ஓர் அம்சமாக மின்னிலக்கத் தொழில்நுட்பத்தை அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவை சிங்கப்பூர் பயன்படுத்தி வருவதாகக் கூறிய அவர், பலத்த மழை வரப்போவதை முன்கூட்டியே கணிப்பது, மீன் பண்ணைகளின் வளர்ச்சியுடன் அவற்றின் உற்பத்தியைப் பெருக்குவது, நோய்களைக் கண்டறிதல் போன்றவை அதனுள் அடக்கம் என்றார்.
அத்துடன், அறிவியல் மற்று ஆராய்ச்சிக்காகவும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் மாணவர்களுக்காகவும் புதிய செயற்கை நுண்ணறிவுத் திறன்கள் மீது சிங்கப்பூர் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாக பிரதமர் வோங் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“மின்னிலக்கத் தொழில்நுட்பப் பயன்பாட்டை உறுதி செய்வதில் சிங்கப்பூர் அதன் பங்கைச் செய்கிறது. அதில் சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டுள்ளது. எல்லா நாடுகளும் அதேபோன்று செயல்பட்டு தங்களது இலக்குகளை அடையலாம்.
“மின்னிலக்க வேறுபாடுகளைக் களைவதற்கான நடைமுறை உத்திகளை வழங்கும் மின்னிலக்க நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து கடந்த செப்டம்பரில் சிங்கப்பூர் தொடங்கியது,” என்று திரு வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.

