லிமா: ஏபெக் (Apec) எனப்படும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் 2030ஆம் ஆண்டுக்கான உச்சநிலைக் கூட்டத்தை சிங்கப்பூர் ஏற்று நடத்தும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
தடையற்ற வர்த்தகத்துக்கான ஆதரவு பலவீனமடைந்து, புவிசார் அரசியல் போட்டித்தன்மை அதிகரிக்கும் நிலையில், எல்லாவற்றையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தொடர்ந்து சாதிக்க சிங்கப்பூருக்கு ஏபெக் ஒரு சிறந்த வழி என்றார் அவர்.
தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் நடைபெற்ற ஏபெக் உச்சநிலைக் கூட்டத்தின் முடிவில் திரு வோங் செய்தியாளர்களிடம் பேசினார்.
“ஏபெக்கை மதிப்புமிக்க ஒரு தளமாகப் பார்க்கிறோம். வெவ்வேறு வழிகளில் அதற்கு ஆதரவு வழங்குவதில் சிங்கப்பூர் அதன் பங்கைச் செய்யும். ஏபெக் உச்சநிலைக் கூட்டத்தை ஏற்று நடத்துவதும் அதில் அடங்கும்,” என்றார் பிரதமர்.
உலகமயமாதலுக்கும் தடையற்ற வர்த்தகத்துக்கும் தேவையான ஆதரவு உலகளவில் பலவீனமடைந்து இருப்பது இந்த உச்சநிலைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட வேண்டிய கவலைக்குரிய அம்சம் என்றார் அவர்.
“தடையற்ற வர்த்தகத்தால் விளையும் பலன்கள் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ளப்படவில்லை என்று ஏபெக்கில் உள்ள பல நாடுகளின் மக்கள் கருதுகின்றனர்.
“இதற்கிடையே, நாட்டுக்கு நாடு ஒத்துழைப்பு என்பதற்குப் பதில் பாதுகாப்பு என்ற பெயரில் புவிசார் அரசியல் பல அம்சங்களில் பிரதிபலிக்கிறது,” என்று திரு வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.
ஏபெக் அமைப்பில் இடம்பெற்றுள்ள 21 நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற பலம் பொருந்திய உலக நாடுகளும் அதில் அங்கம் வகிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட பாதியளவு ஏபெக் நாடுகள் வசம் உள்ளது.
உச்சநிலைக் கூட்டத்தின் முடிவில் கூட்டுப் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது.
விதிகள் தாங்கிய பலதரப்பு வர்த்தக முறைக்கான தங்களது நாடுகளின் ஆதரவை, அந்தப் பிரகடனத்தின் வாயிலாக ஏபெக் தலைவர்கள் மறுஉறுதிப்படுத்தினர்.
இதற்கு முன்னர் 2009ஆம் ஆண்டு ஏபெக் உச்சநிலைக் கூட்டத்தை சிங்கப்பூர் நடத்தியது.
அடுத்த ஆண்டு தென்கொரியாவிலும் 2026ஆம் ஆண்டு சீனாவிலும் அதற்கு அடுத்த 2027ஆம் ஆண்டு வியட்னாமிலும் ஏபெக் உச்சநிலைக் கூட்டம் நடைபெற உள்ளது.