சிங்கப்பூரில் ஹோட்டல் செயல்திறன் கடந்த அக்டோபரில் சரிந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் எஃப்1 இரவுநேரக் கார் பந்தயம் நடைபெற்றபோது ஹோட்டல் செயல்திறன் அதிகரித்ததாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
அக்டோர் மாத சராசரி அறைக் கட்டணம் (ARR) $275.19ஆக குறைந்தது. சென்ற செப்டம்பர் மாதம் பதிவான $315.79 காட்டிலும், அது 12.9 விழுக்காடு குறைவு.
இருப்பினும், ஆண்டு அடிப்படையில், அது 1.7 விழுக்காடு உயர்ந்தது.
கிடைக்கப்பெறும் அறைக்கான வருமானம் (RevPAR) அக்டோபரில் 14.4 விழுக்காடு சரிந்து $225.07ஆக பதிவானது. செப்டம்பரில் அது $263.06ஆக இருந்தது.
ஆண்டு அடிப்படையில், அது 6.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
ஒட்டுமொத்தமாக, அக்டோபரில் அறை வருமானமும் குறைந்தது. மாத அடிப்படையில், அது 13.3 விழுக்காடு இறங்கி $442.7 மில்லியனாகப் பதிவானது. அதற்கு முந்தைய மாதம் அது $510.8 மில்லியனாக இருந்தது. ஆண்டு அடிப்படையில், அது 8.8 விழுக்காடு அதிகரித்தது.
செப்டம்பரின் சராசரி அறைக் கட்டணம், கிடைக்கப்பெறும் அறைக்கான வருமானம், ஒட்டுமொத்த அறை வருமானம் ஆகியவை, இதுநாள்வரை இவ்வாண்டு ஆக அதிகமாகப் பதிவாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சராசரி தங்கும் விகிதம் அக்டோபரில் சற்று சரிந்து, 81.8 விழுக்காடாகப் பதிவானது. ஆனால், ஆண்டு அடிப்படையில், அது 3.8 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில் சிங்கப்பூர் 13.9 மில்லியன் அனைத்துலக வருகையாளர்களை வரவேற்றது. இவ்வாண்டின் பயணத்துறைக் கருத்தரங்கில், முழு ஆண்டுக்கும் 15 மில்லியன் முதல் 16.5 மில்லியன் வரையிலான பயணிகளை பயணத்துறைக் கழகம் எதிர்பார்ப்பதாக அதன் தலைமை நிர்வாகி மெலிசா அவ் கூறினார்.

