சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில், ஓராண்டுக்கு முன்னர் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் குடும்பக் கடன் பொறுப்புகள் ஒரு விழுக்காடு அதிகரித்தன. குடும்பங்கள் அதிகமான அடைமான, தனிப்பட்ட கடன்களைப் பெற்றதே அதற்குக் காரணம்.
அதற்கு முன்னதாக ஆண்டு அடிப்படையில் மூன்று காலாண்டுகளில் அந்த விகிதம் இறக்கம் கண்டிருந்தது.
காலாண்டு அடிப்படையில் 2022ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து சராசரி குடும்பத்துக்கான கடன் பொறுப்புகளின் மதிப்பு ஆக வேகமாக அதிகரித்தது. மூன்றாம் காலாண்டிலிருந்து அது 0.8 விழுக்காடு கூடி $364.2 பில்லியனாக இருந்தது எனப் புள்ளிவிவரத் துறையின் புள்ளிவிவரங்கள் காட்டின.
கார் கடன்கள், கடன்பற்று அட்டைக்கான கடன்கள், வீட்டுப் புதுப்பிப்புக் கடன்கள் போன்ற தனிப்பட்ட கடன்களும், அடைமானக் கடன்களும் குடும்பக் கடன் பொறுப்புகளாகக் கருதப்படுகின்றன.
குடும்பக் கடன்கள் அதிகரித்தபோதும், நான்காம் காலாண்டில் சராசரி குடும்பங்கள் நிதி ரீதியாக நல்ல நிலையில் இருந்தன.
குடும்ப நிகர மதிப்பு ஆண்டு அடிப்படையில் 8.9 விழுக்காடும், காலாண்டு அடிப்படையில் 3.1 விழுக்காடும் அதிகரித்து $2,804.6 பில்லியனாக இருந்தது.
அதிகரித்துவரும் குடும்ப நிகர மதிப்பு என்பது, சராசரி குடும்பத்துக்கு கடன்களை விட அதிக சொத்துகள் இருப்பதைக் குறிக்கிறது.
சேமிப்புகள், பங்கு முதலீடுகள், குடியிருப்புச் சொத்துகள் போன்ற நிதிச் சொத்துகள் குடும்பச் சொத்துகளில் அடங்கும்.
நான்காம் காலாண்டில், குடும்பச் சொத்துகளின் மதிப்பு ஆண்டு அடிப்படையில் 8 விழுக்காடும், காலாண்டு அடிப்படையில் 2.8 விழுக்காடும் கூடி $3,168.8 பில்லியனாக இருந்தது.