நேப்பாளத்திற்கு உதவும் சிங்கப்பூர் மனிதநேய அமைப்பு

நேப்பாளத்திற்கு உதவும் சிங்கப்பூர் மனிதநேய அமைப்பு

படம்: ஆயிஷா ரோஸ்

19 Sep 2026 - 5:48 pm

2 mins read

திடீர் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நேப்பாளத்திற்கு சிங்கப்பூரின் ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ எனும் லாப நோக்கற்ற அமைப்பு துயர்தணிப்பு உதவிகளை வழங்கி வருகிறது.

‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ தொண்டூழியர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 10 நாள்கள் நேப்பாளப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு மக்களுக்குத் தேவைப்படும் தூய குடிநீரையும் பிற உதவிப் பொருள்களையும் வழங்கினர்.

‘ஹார்மனி இன் டைவர்சிட்டி கேலரி’யில் சனிக்கிழமை (செப்டம்பர் 19) நடைபெற்ற அதன் பங்குதாரர்கள் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள், அவை தொடர்பான கண்ணோட்டங்கள், நேப்பாளத்தில் நடைபெறவுள்ள மறுவாழ்வுத் திட்டங்கள், சிங்கப்பூரர்களுக்கான உள்ளூர் தன்னார்வத் தொண்டு வாய்ப்புகள் ஆகியவை குறித்து ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ பகிர்ந்துகொண்டது.

நிகழ்ச்சியின்போது நேப்பாளப் பேரிடரில் உயிரிழந்தோர்க்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

உள்துறை மூத்த துணை அமைச்சர் கோ பெய் மிங் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“நேப்பாளப் பேரிடரால் ஏற்பட்ட அழிவு மிகப்பெரியது.1,300க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர். ஒன்பது சிங்கப்பூரர்கள் உட்பட 5,000க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை. வீடுகள், வாழ்வாதாரங்கள், சமூகங்கள், இன்றியமையா உள்கட்டமைப்புகள் என அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. இதனால், நேப்பாள மக்களின் மீட்சிக்கான பயணம் மிக நீண்டதாக அமையும்,” என்று அமைச்சர் கோ பெய் மிங் தமது உரையின்போது கூறினார்.

நேப்பாளத்தில் நிகழ்ந்த துயரம், அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பரந்த சவாலையும் சுட்டிக்காட்டுகிறது என்றும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு, உலகெங்கிலும் அடிக்கடி நிகழக்கூடிய, கடுமையான இயற்கைப் பேரிடர்களுக்கும் காரணமாக அமைகிறது என்றும் அவர் சொன்னார்.

‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ குழுவினருடன் உள்துறை மூத்த துணை அமைச்சர் கோ பெய் மிங் (நடுவில்).
‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ குழுவினருடன் உள்துறை மூத்த துணை அமைச்சர் கோ பெய் மிங் (நடுவில்). - படம்: ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்

நேப்பாளத்திற்குச் சென்றிருந்த தொண்டூழியர்களில் ஹேமா நிரோஷினியும் ஒருவர். ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பில் திட்டங்களையும் பங்காளித்துவத்தையும் கையாளுவதில் பொறுப்பு வகிக்கும் அவர் ,அடுத்த இரண்டு வாரங்களில் நேப்பாளப் பேரிடரில் பதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சிங்கப்பூரில் புதிய நிதி திரட்டுத் திட்டங்கள் குறித்துப் பேசினார்.

“இனம், சமயம் கடந்த இந்தச் செயல்பாடுகளில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறும் வீதி நிதி திரட்டும் பணியும் அடங்கும். அதற்கு நன்கொடைப் பெட்டிகளை ஏந்திச் செல்லவும் 200 தொண்டூழியர்கள் தேவைப்படுகின்றனர். மேலும், அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் நேப்பாளத்திற்கான உதவிப் பொருள்களைக் கட்டிப் பொதியாக்கும் பணிக்கு 100 பேர் தேவைப்படுகின்றனர்,” என்று குமாரி ஹேமா கூறினார்.

வரும் டிசம்பரில் இமயமலைக் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பாக, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குத் தேவையான குடிநீர், வீட்டு வசதி போன்ற இன்றியமையாத் தேவைகளை வழங்கும் முயற்சிகளைப்பற்றி அமைப்பின் தலைவரும் தூதருமான திரு ஓங் கெங் யோங் பேசினார்.

“பாதிக்கப்பட்டவர்களுக்கான துயர்தணிப்புப் பணிகளிலிருந்து மறுவாழ்வுப் பணிகளுக்கான மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கூடுதல் உதவிகளை வழங்க ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பு தற்போது தயாராகி வருகிறது,” என்று அவர் கூறினார்.

மேலும், நேப்பாளப் பேரிடருக்குக் கூடுதல் நிதி திரட்டும் நோக்கில் ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பு 48 நாள்களுக்கான பொது நிதி திரட்டை செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்
சமூகம்மனிதநேயம்நேப்பாளம்வெள்ளம்சிங்கப்பூர்