நான் கண்ட 1980களின் சிங்கப்பூர்

வியப்பிலிருந்து நம்பிக்கைக்குப் பயணம்

நான் கண்ட 1980களின் சிங்கப்பூர்

3 mins read
ரமா சங்கரன்
8619494e-5c62-4267-9b2a-f37164007573
2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி, பாடாங்கில் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பின் நிறைவில், அங்குத் திரண்டிருந்த பார்வையாளர்கள் வாணவேடிக்கையைக் கண்டு களித்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon
-

சிங்கப்பூருக்கு 1980களின் தொடக்கத்தில் நான் வந்தபோது, உலகம் வியக்கும் நகர நாடாக அது முழுமையாக உருவெடுத்திருக்கவில்லை. ஆனால், மாற்றத்தை அஞ்சாமல், எதிர்காலத்தை நோக்கி உறுதியுடன் முன்னேறிக்கொண்டிருந்த நாடாக அது என்னை வரவேற்றது.

பாய லேபார் விமான நிலையத்தில் இறங்கிய எனக்கு, குடிநுழைவு நடைமுறைகளும், கன்வேயர் பெல்ட்டில் பயணப்பெட்டிகள் நகர்ந்த காட்சியும் புதுமையாக இருந்தன. சில மாதங்களிலேயே சாங்கி விமான நிலையம் செயல்படத் தொடங்கியது. அது மிகப் பிரம்மாண்டம். 

விமான நிலையத்தில் இருந்து, வீட்டுக்குச் செல்லும் வழியில் வானொலியில் ஒலித்த உள்ளூர் கலைஞரின் கர்நாடக இசை மேலும் ஒரு வியப்பை அளித்தது. பல மொழிகளையும் பண்பாடுகளையும் இயல்பாக அரவணைத்த சிங்கப்பூரின் முகத்தை நான் அன்றே முதன்முறையாகக் கண்டேன்.

1981ஆம் ஆண்டு கடைசி நாள் இரவில், நேரத்தை அரை மணி நேரம் முன்னோக்கி மாற்றி புத்தாண்டை வரவேற்ற நிகழ்வு இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது. ஒரு நாட்டின் முன்னேற்றம் பெரிய திட்டங்களில் மட்டுமல்ல; காலத்தோடு இணைந்து செயல்படும் மனப்பான்மையிலும் இருக்கிறது என்பதை அது உணர்த்தியது.

அந்தக் காலகட்டம் சிங்கப்பூருக்குப் பொருளியல்ரீதியாக எளிதானதாக இல்லை. ‘ரோல்லை’ (Rollei) நிறுவனம் மூடப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்ததும், 1985ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளியல் மந்தநிலையும் நாட்டுக்குப் பெரும் சவால்களாக அமைந்தன. ஆனால், அவை சிங்கப்பூரின் முன்னேற்றத்தைத் தடுக்கவில்லை. மாறாக, திறன் மேம்பாடு, தொழில்நுட்பம், உயர்கல்வி, சேவைத் துறை ஆகியவற்றை வளர்ச்சியின் புதிய தூண்களாக மாற்றியது. பின்னர் உலகப் பொருளியலில் உறுதியாக நிற்பதற்கான அடித்தளம் அக்காலத்திலேயே அமைக்கப்பட்டது.

அந்த மாற்றங்களை நான் ஒரு புதிய குடியேறியாக மட்டுமல்ல, ஒரு மாணவியாகவும் அனுபவித்தேன். 

வேலை தேடும் இடைவெளியில் தேசியப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் படிப்பைத் தொடர்ந்தேன். சிங்கப்பூரின் உற்பத்தித் துறை, பொருளியல் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. பின்னர் ஊடகத் துறையில் பணியாற்றியபோது, கொள்கைகளுக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையே இருந்த நெருங்கிய தொடர்பை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

1980கள், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கிய காலமாகவும் நினைவில் நிற்கின்றன. அங் மோ கியோ நூலகத்தில் குழந்தைகளுக்கு ஆங்கிலப் புத்தகங்கள் வாசித்துக் காட்டும் தொண்டூழியத்தில் ஈடுபட்ட அனுபவம் எனக்கு மறக்க முடியாதது. 

வாசிப்பை ஊக்குவித்த தேசிய இயக்கங்கள், பள்ளிகளில் மொழித் திறனுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், சமூக நிலையங்கள் வழியாக கலை, விளையாட்டு, நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்த்த முயற்சிகள் – இவை அனைத்தும் எதிர்கால மனித வளத்தில் செய்த முதலீடுகளாக அமைந்தன.

அதேபோல், சுத்தம், பொதுச் சுகாதாரம், புகைபிடித்தல் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு, ஆறுகளைத் தூய்மைப்படுத்திய திட்டங்கள் ஆகியவை, சிங்கப்பூரின் வளர்ச்சி, கட்டடங்களிலும் சாலைகளிலும் மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் பிரதிபலிக்க வேண்டும் என்ற கொள்கையை வெளிப்படுத்தின.

இன்று தேசிய தினத்தைக் கொண்டாடும் வேளையில், 1980களின் சிங்கப்பூரை நினைத்துப் பார்க்கும்போது என் மனத்தில் ஒலிப்பது ஒரே ஒரு உண்மை. இந்த நாடு சவால்கள் இல்லாத நாடாக இருந்ததில்லை. ஆனால், ஒவ்வொரு சவாலையும் மாற்றத்திற்கான வாய்ப்பாகக் கண்ட நாடாக இருந்து வருகிறது.

உழைப்பை மதித்தது. கல்வியில் முதலீடு செய்தது. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தியது. பல இன மக்களை ஒரே தேசிய அடையாளத்தின்கீழ் இணைத்தது. அதனால்தான், இன்றைய சிங்கப்பூர் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது.

அந்த மாற்றங்களை என் கண்களால் காணவும், அவற்றோடு சேர்ந்து பயணிக்கவும் கிடைத்த வாய்ப்பு, என் வாழ்க்கையின் அரிய பேறுகளில் ஒன்றாகும்.

குறிப்புச் சொற்கள்
தேசிய தினம் 2026நம்பிக்கைகுடிநுழைவு