கரிமம் குறைந்த மின்சார இறக்குமதியை சிங்கப்பூர் 50% அதிகரித்தது

2 mins read
7325aa87-cb76-440c-be41-979fad0b7c6d
சிங்கப்பூரின் கரிம வெளியேற்றத்தில் ஏறக்குறைய 40 விழுக்காடு மின்சாரத் துறையில் நிகழ்கிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் அதன் மின்துறையில் கரிமப் பயன்பாட்டைக் குறைக்க வேகமாக முயன்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கரிமம் குறைந்த மின்சாரத்தை வெளிநாடுகளில் இருந்து தருவிக்கும் தனது இலக்கை 6 கிகாவாட்டுக்கு சிங்கப்பூர் உயர்த்தி உள்ளது.

2023ஆம் ஆண்டுக்குள் அந்த அளவு மின்சாரத்தைத் தருவிப்பது சிங்கப்பூரின் திட்டம்.

இதற்கு முன்னர், கடந்த 2021ஆம் ஆண்டு கரிமம் குறைந்த மின்சாரத் தருவிப்பின் அளவு 4 கிகாவாட் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அதில் 50 விழுக்காடு கூடுதலாகத் திட்டமிடப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து மின்சாரம் தருவிக்கப்படும் விகிதம் 2035ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த எரிசக்தித் தேவையில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சாரத் தருவிப்புக் குத்தகைகளுக்கு உட்பட்ட வர்த்தக நடவடிக்கைகள் 2028ஆம் ஆண்டு முதல் தொடங்கும் என்று எரிசக்தி சந்தை ஆணையம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) தெரிவித்தது.

தற்போது, சிங்கப்பூரின் 95 விழுக்காட்டு எரிசக்தி உற்பத்தி இயற்கை எரிவாயு, புதைபடிவ எரிபொருள் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது.

நாட்டின் கரிம வெளியேற்றத்தில் ஏறக்குறைய 40 விழுக்காடு மின்சாரத் துறையில் நிகழ்கிறது.

சிங்கப்பூரின் எதிர்கால எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்யவும் மின்சாரத் தருவிப்புத் திட்டங்களில் நம்பத்தகுந்த நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்தை நிறைவேற்றவும் மின்சாரத் தருவிப்பு இலக்கை உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக ஆணையம் கூறியது.

புதிய மின்சாரத்தை சிங்கப்பூர் தருவிப்பதற்கான திட்டம் 2023ஆம் ஆண்டின் இறுதிவரை ஆய்வுநிலையிலேயே இருந்தது.

இந்தோனீசியா, கம்போடியா, வியட்னாம் ஆகிய நாடுகளில் இருந்து, தொடக்க இலக்கையும் தாண்டி 4.2 கிகாவாட் மின்சாரத்தைத் தருவிப்பதற்கான திட்டம் அது.

எந்தவொரு நிறுவனமும் மின்சாரத்தை வெளிநாடுகளில் இருந்து தருவிக்க எரிசக்திச் சந்தை ஆணையத்திடம் இருந்து உரிமம் பெற வேண்டும்.

இந்தோனீசியாவில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய ஐந்து திட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய உரிமம் வழங்கப்பட்டு உள்ளதாக ஆணையம் அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை (செப்டம்பர் 5) நடைபெற்ற இந்தோனீசியா அனைத்துலக நீடித்த நிலைத்தன்மைக் கருத்தரங்கில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்