சிகிச்சையும் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படாத, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மூன்று நோய்கள் மீதான கண்காணிப்பை சிங்கப்பூர் தீவிரப்படுத்த உள்ளது.
எனவே அக்டோபர் 31 முதல், அதுதொடர்பான அனைத்து பாதிப்புகளையும் அதிகாரிகளுக்கு மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டியது கட்டாயம்.
கிரிமியன்-கங்கோ ரத்தப்போக்கு காய்ச்சல், லாசா காய்ச்சல், மார்பர்க் கிருமி நோய் ஆகியவையே அந்த நோய்களாகும்.
இந்த மூன்று நோய்களுமே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றும் மனிதரிடமிருந்து மனிதருக்கு கிருமி மூலம் பரவும் சாத்தியக்கூறு கொண்ட ரத்தப்போக்கு காய்ச்சல்கள் என்பதால், இவற்றைத் தான் சில காலமாக கண்காணித்து வந்ததாகத் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு முகமை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதம் 50 விழுக்காடு வரை இருக்கலாம்.
கடந்த செப்டம்பர் மாதம் தொற்றுநோய்த் தடுப்புச் சட்டம் மற்றும் அதன் தொடர்புடைய விதிமுறைகளைச் சுகாதார அமைச்சு திருத்தியதைத் தொடர்ந்து, இந்த மூன்று நோய்களும் தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தின் பட்டியலில் சேர்க்கப்படுகிறது.
மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பயிற்சியாளர்களும் மருத்துவ சோதனைக்கூடங்களும் உறுதிப்படுத்தப்படும் அல்லது சந்தேகிக்கப்படும் எல்லா பாதிப்புகள் குறித்தும் அதிகாரிகளுக்குச் சட்டபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்கிறது அந்தச் சட்டம்.
இந்த நோய்களால் சிங்கப்பூருக்கு ஏற்படும் ஆபத்து குறைவாகவே உள்ளபோதிலும், தேவையான நேரத்தில் உடனடியாகச் செயல்பட நாடு தயாராக இருப்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்யும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் முகமையின் பேச்சாளர்.
பாதிப்புகள் குறித்து அறிவிப்பது நோயை முன்கூட்டியே கண்டறிய உதவும்.
அத்துடன், நோய் தொற்றியவர்களைத் தனிமைப்படுத்துதல் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிதல் போன்ற பொது சுகாதார நடவடிக்கைகளைச் சரியான நேரத்தில் எடுக்கவும் அது உதவும் என்று அவர் மேலும் கூறினார்.
லாசா காய்ச்சல் மற்றும் மார்பர்க் கிருமி நோய்க்கான தடுப்பூசி தயாரிப்பு தற்போது நடைபெற்று வந்தாலும், இந்த நோய்களுக்கு தற்போது வரை அங்கீகரிக்கப்பட்ட சிறப்புச் சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் இணையத்தளம் குறிப்பிடுகிறது.
நவம்பர் மாதம் முதல், தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு முகமையின் வாராந்தர செய்தி அறிக்கையில், புதிதாகச் சேர்க்கப்பட்ட இந்த மூன்று நோய்களும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பல்வேறு தொற்று நோய்களால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலதுறை மருந்தகங்களுக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை அந்த அறிக்கை வழங்குகிறது.
