உத்திசார் ஒத்துழைப்பை ஆராயும் சிங்கப்பூர் - இந்தியா அமைச்சர்நிலை வட்டமேசை மாநாடு

உத்திசார் ஒத்துழைப்பை ஆராயும் சிங்கப்பூர் - இந்தியா அமைச்சர்நிலை வட்டமேசை மாநாடு

2 mins read
d6ad73a7-9397-4e08-8388-7bfb97ef2618
மூன்றாவது சிங்கப்பூர்-இந்தியா அமைச்சர்நிலை வட்டமேசை மாநாடு 2025ஆம் ஆண்டு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது. - கோப்புப் படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
Google News Preferred Icon

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மறுஆய்வு செய்யவும் புதிய வாய்ப்புகளை அடையாளம் காணவும் நான்காவது ‘சிங்கப்பூர் - இந்தியா அமைச்சர்நிலை வட்டமேசை மாநாடு’, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) சிங்கப்பூரில் நடைபெறுகிறது.

இருநாடுகளும் ஒப்புக்கொண்ட முன்னுரிமைப் பணிகளை நடைமுறைப்படுத்துவதையும் புதிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதையும் இந்த மாநாடு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிங்கப்பூர்த் தரப்பிற்குத் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில்துறை (வர்த்தகம்) அமைச்சருமான கான் கிம் யோங் தலைமை தாங்குகிறார். சிங்கப்பூர் அமைச்சர்கள் குழுவில் மூத்த அமைச்சரும் உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா. சண்முகம், வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, போக்குரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியத் தரப்பில் அந்நாட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், வர்த்தக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகம், தொழில்துறை, மின்னிலக்க, தகவல் தொழில்நுட்பத்துறைத் துணையமைச்சர் ஜிதின் பிரசாதா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இந்திய அமைச்சர்கள் சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்துப் பேசுவர். மேலும், துணைப் பிரதமர் கான் கிம் யோங் அளிக்கும் மதிய விருந்திலும் அவர்கள் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் முதல் சந்திப்பு 2022 செப்டம்பரில் புதுடெல்லியிலும், இரண்டாவது சந்திப்பு 2024 ஆகஸ்ட்டில் சிங்கப்பூரிலும், மூன்றாவது சந்திப்பு 2025 ஆகஸ்ட்டில் புதுடெல்லியிலும் நடைபெற்றன.

மேம்பட்ட உற்பத்தி, இணைப்பு, மின்னிலக்கமயமாதல், சுகாதாரப் பராமரிப்பும் மருத்துவமும், திறன் மேம்பாடு, நீடித்த நிலைத்தன்மை ஆகிய துறைகளில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

இதனுடன் இணைந்து நான்காவது ‘இந்தியா - சிங்கப்பூர் வர்த்தக வட்டமேசை மாநாடும்’ நடைபெறுகிறது. அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் 70 உறுப்பினர்கள் கொண்ட இந்திய வர்த்தகப் பேராளர் குழு இதில் பங்கேற்கிறது.

இந்திய வேளாண் உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கிலான ‘அபெடா - ஃபேர்பிரைஸ்’ திட்டத்தையும் அவர் நேரில் பார்வையிடுவார்.

இம்மாநாடு இருநாடுகளுக்கு இடையிலான உத்திசார் உறவை மேலும் வலுப்படுத்த உறுதுணையாக அமையும்.

குறிப்புச் சொற்கள்