சிங்கப்பூரும் இந்தியாவும் பல்வேறு நிலைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தியிருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே இரண்டாவது முறையாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெற்ற அமைச்சர்நிலை வட்டமேசைக் கூட்டம் குறித்து திரு வோங் பதிவிட்ட இன்ஸ்டகிராம் பதிவில் இவ்வாறு கூறினார்.
உயர்நிலை உற்பத்தித்துறை, இணைப்புத்தன்மை என, ஒத்துழைப்புக்கான புதிய யோசனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் திரு வோங் கூறினார்.
“2022ல் புதுடெல்லியில் முதன்முதலாக நடைபெற்ற சிங்கப்பூர் - இந்திய வட்டமேசைக் கூட்டத்தில் சிங்கப்பூர்க் குழுவை நான் வழிநடத்தினேன். இப்போது சிங்கப்பூர் நடத்தும் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் துணைப் பிரதமர் கான் கிம் யோங், எனக்குப் பிறகு சிங்கப்பூர்க் குழுவை வழிநடத்துகிறார்,” என்றார் திரு வோங்.
“சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அணுக்கமான உத்திபூர்வ ஒத்துழைப்புக்கும் பங்காளித்துவத்துக்கும் இத்தகைய திட்டங்கள் வழிவகுக்கும்,” என்றும் அவர் கூறினார்.
ஷங்ரிலா ஹோட்டலில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெற்ற சிங்கப்பூர் - இந்திய அமைச்சர்நிலை வட்டமேசைக் கூட்டம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவைப் புதுப்பிக்கும் விதமாக அமைந்தது.
புதுடெல்லியில் 2022ல் முதல் கூட்டம் இடம்பெற்ற காலகட்டத்திலிருந்து முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது என மறுஆய்வு காட்டியது.
அத்துடன், நீடித்த நிலைத்தன்மை, மின்னிலக்கத் துறை, திறன் மேம்பாடு, சுகாதாரம், உற்பத்தித் திறன், இணைப்புத்தன்மை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளும் சந்திப்பின்போது அடையாளம் காணப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர்க் குழுவிற்கு துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் தலைமை வகித்தார். வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் இரண்டாம் உள்துறை அமைச்சருமான ஜோசஃபின் டியோ, மனிதவள அமைச்சரும், வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டாக்டர் டான் சீ லெங், போக்குவரத்து அமைச்சரும் நிதிக்கான இரண்டாம் அமைச்சருமான சீ ஹொங் டாட் ஆகியோர் குழுவில் இடம்பெற்றனர்.
இந்தியக் குழுவில், நிதி மற்றும் நிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்தச் சந்திப்பின்போது இருதரப்பினரும் இணைந்து பணியாற்ற தங்களது ஆவலை வெளிப்படுத்தினர். உலகச் சவால்களைச் சமாளித்து, புதிய துறைகளில் வாய்ப்புகளை அடையாளம் கண்டு நீடித்த வளர்ச்சி அடைய அவர்கள் கடப்பாடு தெரிவித்தனர் என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.