இந்தியாவை விற்பனைச் சந்தையாக மட்டுமன்றி பங்காளியாகவும் பாருங்கள்: துணை அமைச்சர் அறைகூவல்

இந்தியாவை விற்பனைச் சந்தையாக மட்டுமன்றி பங்காளியாகவும் பாருங்கள்: துணை அமைச்சர் அறைகூவல்

1 of 2
படம்: சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம்
கோப்புப் படம்: இந்தியாஃப்ரீஃபிங்.காம்

05 Oct 2026 - 4:11 pm

2 mins read

சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவை வெறும் விற்பனைச் சந்தையாக மட்டும் பார்க்காமல், இருநாடுகளுக்கும் பயன் தரும் பங்காளித்துவமாக பார்க்க வேண்டும் என்று எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் கூறியுள்ளார்.

திங்கட்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்ற சிங்கப்பூர்-இந்தியா வளர்ச்சி கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்புரையாற்றிய திருவாட்டி கான், உலகம் நிச்சயமற்ற நிலையில் இருக்கும் இந்த நேரத்தில், சிங்கப்பூர்-இந்தியா பங்காளித்துவம் வலுவான அடித்தளத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

வெளியுறவுத் துணை அமைச்சருமான அவர் சிங்கப்பூர், இந்தியா இடையிலான வர்த்தகப் பொருளியல் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு மூன்று முக்கிய வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அவ்வகையில், இரு அரசுகளும் ஏற்படுத்தியுள்ள கட்டமைப்புகளை நிறுவனங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

கடந்த 2025ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையிலான சரக்கு வர்த்தகம் $35 பில்லியனை எட்டியுள்ளதை நினைவுகூர்ந்த திருவாட்டி கான், கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட விரிவான உத்திசார் பங்காளித்துவம், ஆண்டுதோறும் நடைபெறும் அமைச்சர்கள் வட்டமேசைக் கூட்டம் உள்ளிட்டவை இதற்குத் துணைநிற்பதாகவும் சொன்னார்.

சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி இருவரும் மாநாட்டில் நேரடியாகப் பங்கேற்றிருப்பதைச் சுட்டிக்காட்டிய திருவாட்டி கான், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு உள்ளூர் நிறுவனங்கள் தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

மாநில அளவிலான தனித்துவ வாய்ப்புகள்

இந்தியாவில் வாய்ப்புகளைத் தேடும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு உதவ கடந்த நவம்பரில் பெங்களூரில் சிங்கப்பூர் நிறுவன மையம் தொடங்கப்பட்டுள்ளதைச் சுட்டிய திருவாட்டி கான், செம்ப்கார்ப் நிறுவனம் இந்தியாவின் 13 மாநிலங்களில் ஏறத்தாழ 7.6 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் அவற்றை விரிவாக்கம் செய்ய அது ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பகுதிமின்கடத்தி, தொழிற்பூங்காக்கள், மின்னிலக்கப் பரிவர்த்தனை, பசுமைப் பொருளியல் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார்.

இந்தியச் சந்தைக்குள் நுழைவது என்பது முதல் படி மட்டுமே என்று குறிப்பிட்ட திருவாட்டி கான், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனக்கே உரித்தான முன்னுரிமைகளையும் தொழில்துறை வலிமைகளையும் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். 

நிறுவனங்கள் இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு, இந்திய மாநில அரசுகளுடனும் உள்ளூர் வணிகங்களுடனும் நேரடியாகத் தொடர்புகொண்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை முன்வைத்த அவர், இதனால் நிறுவனங்கள் சிறப்பான வாய்ப்புகளை கண்டறிந்து சரியான பங்காளிகளையும் தேர்வுசெய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு இந்தியா மிக முக்கியமான சந்தை என்றும் கடந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீட்டில் US$196.68 பில்லியனுடன் (S$252 மி.) சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளதாகவும் சிங்கப்பூர் தொழில் சம்மேளனத் தலைவர் மார்க் லீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்இந்தியாநல்லுறவுவர்த்தகம்