பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வர்த்தகர்கள் இணக்கம்: துணைப் பிரதமர் கான்

பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வர்த்தகர்கள் இணக்கம்: துணைப் பிரதமர் கான்

2 mins read
c724caa6-e4c2-415a-931a-a1775f88fdc1
சிங்கப்பூருக்கு இருநாள் வருகை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) நடைபெற்ற வர்த்தகக் கூட்டத்தில் பங்கேற்று துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் பங்கேற்றுப் பேசினார். - படம்: சமூக ஊடகம்

சிங்கப்பூர்-இந்திய வர்த்தகர்கள் மின்னிலக்கமயம், உட்கட்டமைப்பு, திறன்மேம்பாடு போன்ற அம்சங்களில் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டு உள்ளதாக துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) வர்த்தகக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார்.

அப்போது திரு கான் குறிப்பிடுகையில், “பிரதமர் மோடி 2015ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வருகை அளித்த பின்னர் நிறைய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அறிவார்ந்த நகரங்களை உருவாக்குவது பற்றியும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பற்றியும் அவர் அப்போது பேசினார்.

தற்போது இந்தியா வேகமாக வளரும் பொருளியல் நாடாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணுவியல் மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற வளரும் துறைகள் அங்கு உருவெடுத்ததன் மூலம் புதிய தொழிலியல் வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன.

வளர்ச்சிகாணும் இந்தியாவின் நீண்டகால பங்காளித்துவ நாடாக சிங்கப்பூர் விளங்கி வருகிறது. இந்தியாவின் பொருளியல் வளர்ச்சியில் சிங்கப்பூரின் நம்பிக்கை தொடரும்.

2000ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூர், 2022 நிதியாண்டில் அந்த முதலீடுகளில் 23 விழுக்காட்டை வகித்தது.

முன்னேற்றத்தை நோக்கி நாம் செல்கையில் பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்தும் அதேநேரம் புதிய துறைகளின் வளர்ச்சியைத் தழுவி, பொருளியல்களைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பது இன்றியமையாதது. அந்த நோக்கத்தில்தான் வெவ்வேறு வர்த்தகங்களின் தலைவர்கள் இங்கு வந்துள்ளனர்.

அந்த வர்த்தகர்கள் இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீடுகளையும் பங்களிப்புகளையும் பற்றியும் இந்தியாவில் உள்ள புதிய வாய்ப்புகளின் மீது தங்களுக்கு இருக்கும் ஆர்வம் குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வார்கள்.

“இன்று வந்துள்ள வர்த்தகர்களில் சிலர் கடந்த வாரம் இங்கு நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள். தொழிலியல் பூங்கா, திறன்மேம்பாடு, உள்கட்டமைப்பு, மின்னிலக்கமயம் போன்ற பல அம்சங்களில் இணைந்து பணியாற்ற அவர்கள் ஒப்புக்கொண்டு உள்ளனர்.

“இதில் இன்னும் அதிகமான தனியார் துறையினரை ஊக்குவிப்பது எப்படி என்பது குறித்த கருத்துகளை பகிர்ந்துகொள்ள வர்த்தகத் தலைவர்களை அழைக்கிறேன்,” என்று திரு கான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்