ராணுவப் பயிற்சி வசதிகளை ஒன்றிணைந்து உருவாக்குவது குறித்து சிங்கப்பூர், இந்தோனீசியா கலந்துரையாடல்

1 mins read
e9400441-5bc6-4ee4-81e7-dc5ea22f1404
இந்தோனீசியத் தற்காப்பு அமைச்சர் ஜாஃப்ரி சம்சுதீனைச் (இடது) சந்தித்துப் பேசிய தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங். - படம்: சான் சுன் சிங்/ஃபேஸ்புக்

இந்தோனீசியாவின் மேற்குக் கலிமந்தான், பத்துராஜா, சியாபு விமானப் படை ஆயுதங்கள் முகாம் ஆகியவற்றில் ராணுவப் பயிற்சி வசதிகளை ஒன்றிணைந்து உருவாக்குவது தொடர்பாக சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் கலந்துரையாடியிருப்பதாகத் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இருநாடுகளின் ராணுவங்களும் ஒன்று மற்றொன்றிடமிருந்து கற்றுக்கொள்ள கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும் என்று அமைச்சர் சான் கூறினார்.

தென்சுமத்ராவில் உள்ள பத்துராஜாவில் ராணுவப் பயிற்சி வசதியும் ரியாவ்வில் உள்ள பெக்கான்பாருவில் விமானப் படை பயிற்சி வசதியும் கட்டப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, அடுத்த சில மாதங்களில் சிங்கப்பூரின் சிறப்புப் படைகள் மேற்குக் கலிமந்தானில் முதன்முறையாகப் பயிற்சி மேற்கொள்ளும் என்று அமைச்சர் சான் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 6) தெரிவித்தார்.

இருநாடுகளும் கூடிய விரைவில் கூட்டு போர் விமானச் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபடும் என்றும் திரு சான் செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 5) ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் ஜாஃப்ரி சம்சுதீனுடனான சந்திப்புக்குப் பிறகு, திரு சான் இத்தகவல்களை வெளியிட்டார்.

திரு சான், இந்தோனீசியாவுக்கு இரண்டு நாள் அறிமுகப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்பயணம் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) நிறைவடைந்தது.

திரு சானும் திரு ஜாஃப்ரியும் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான வலுவான, நீண்டகால இருதரப்பு தற்காப்பு உறவை மறுஉறுதி செய்தனர்.

குறிப்புச் சொற்கள்