ஜகார்த்தா: இந்தோ - பசிபிக் வட்டாரத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் பயிலரங்கு ஒன்றில் சந்தித்துக்கொண்டன.
இருநாட்டுத் தற்காப்புத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஜகார்த்தாவில் இம்மாதம் 21ஆம் தேதி கூடினர்.
சிங்கப்பூரின் எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனம், இந்தோனீசியாவின் டிஃபென்ட் ஐடி கூட்டமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தற்காப்பு, பாதுகாப்புத் தீர்வுகளை வழங்கும் பிடி மிராஜ் டிஃபென்ஸ் இந்தோனீசியா என்ற நிறுவனம் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்தது.
வல்லரசுகளுக்கு இடையில் அதிகரிக்கும் போட்டித்தன்மை, தென் சீனக் கடல் பதற்றம், மலாக்கா, சிங்கப்பூர் நீரிணைகளில் உள்ள கடல்துறை பாதுகாப்புச் சவால்கள், அதிகரித்துள்ள இணைய அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்கு இடையே வட்டார நாடுகள் அவற்றின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது அவசியம் என்றார் இந்தோனீசியத் தற்காப்பு அமைச்சின் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர், ஏர் கமாடோர் டெடி லக்ஸ்மோனோ.
இந்தோனீசியா, தற்காப்பு ஒத்துழைப்புகளை அரசாங்கங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பாக மட்டும் பார்க்காமல், தற்காப்புத் துறைகளுக்கு இடையிலான உத்திபூர்வப் பங்காளித்துவமாகவும் கருதுகிறது என்றார் கமாடோர் டெடி.
சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பு 2022ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டின்மீது அமைந்துள்ளது என்றார் அவர்.
எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனமும் டிஃபென்ட் ஐடி கூட்டமைப்பும் தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்ளவேண்டும் என்றும் கமாடோர் டெடி குறிப்பிட்டார்.
எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனத்தைச் சேர்ந்த பிரிகேடியர்- ஜெனரல் சுவா ஜின் கியெட், வழக்கமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தாண்டி கடல்துறை பாதுகாப்பு போன்ற பொதுவான சவால்களைச் சிங்கப்பூரும் மலேசியாவும் எதிர்கொள்வதாகச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூர் இந்தோனீசியாவைப் போல பெரிய நாடல்ல. நெருக்கடியான நேரங்களில் அண்டை நாடுகளிடமிருந்து, குறிப்பாக, இந்தோனீசியாவிடமிருந்து ஆதரவை நாடுவது தவிர்க்க முடியாத ஒன்று,” எனப் பிரிகேடியர் - ஜெனரல் சுவா தெரிவித்தார்.
அனைத்து படிநிலைகளிலும் உத்திபூர்வ ஒத்துழைப்பு கடைப்பிடிக்கப்பட்டால்தான் அது நல்ல பலன் கொடுப்பதுடன் நீடித்து நிலைத்திருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

