விலைவாசி மிதமாக உயரும் என்று குடும்பங்கள் எதிர்பார்ப்பு: கருத்தாய்வு

விலைவாசி மிதமாக உயரும் என்று குடும்பங்கள் எதிர்பார்ப்பு: கருத்தாய்வு

2 mins read
d15df0a7-60ac-47f7-b7ca-49ee74cefb88
உலக அளவில் நிலவும் நிச்சயமற்றதன்மை, விநியோக நடவடிக்கைகளில் நிலவும் இடையூறுகள், புதிய தீர்வைகள் குறித்த அச்சம் முதலியவற்றால் பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்று சிங்கப்பூர்க் குடும்பங்கள் எண்ணுவதாகக் கருத்தாய்வு கூறுகிறது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரில் உள்ள குடும்பங்கள், விலைவாசி உயர்வு குறித்த எதிர்பார்ப்பை மிதமான அளவுக்கு உயர்த்தியுள்ளனர். உலக அளவில் நிலவும் நிச்சயமற்றதன்மை, விநியோக நடவடிக்கைகளில் நிலவும் இடையூறுகள், புதிய தீர்வைகள் குறித்த அச்சம் முதலியவை அதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

ஆண்டு அடிப்படையில், கடந்த மாதம் பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்பு, 3.4 விழுக்காட்டுக்குக் கூடியிருந்தது. மார்ச் மாதத்தில் அது 3.3 விழுக்காடாக இருந்தது. பணவீக்க எதிர்பார்ப்பு தொடர்பான சிங்கப்பூர்க் குறியீடு என்றும் கருத்தாய்வில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. கருத்தாய்வை, டிபிஎஸ் குழும ஆய்வுப் பிரிவும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்டன.

அதே போக்கை அடிப்படைப் பணவீக்க எதிர்பார்ப்புக் குறியீடும் பிரதிபலித்தது. சென்ற காலாண்டில் 3.4 விழுக்காட்டுக்கு அது உயர்ந்தது. முந்திய காலாண்டில் அது 3.3 விழுக்காடாக இருந்தது.

“எரிசக்திப் பொருள்களின் விநியோகத்தில் தடைகள் நிலவுகின்றன. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களும் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்ப முன்னேற்றத்தால் அதிகரித்துள்ள தேவைகளுமே அதற்கு முக்கியக் காரணங்கள். இவற்றாலேயே இந்த ஆண்டில் மீண்டும் உலக அளவில் பணவீக்கம் தலைதூக்கியிருக்கிறது,” என்று டிபிஎஸ் வங்கியின் தலைமை பொருளியல் நிபுணர் டாக்டர் தைமூர் பைக் கூறினார்.

கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்தாய்வில் 536 பேர் பங்கெடுத்தனர். அவர்களில் 87.7 விழுக்காட்டினர், அடுத்த ஓராண்டில் பணவீக்கம் அதிகரிக்கும் என்று நம்புகின்றனர். மார்ச் மாதம் பதிவான 88.3 விழுக்காட்டைவிட அது சற்றுக் குறைவு.

கருத்தாய்வில் கலந்துகொண்டவர்கள், சிங்கப்பூரர்களையும் சிங்கப்பூர்வாசிகளையும் பிரதிபலிப்பதாக டிபிஎஸ் வங்கியும் பல்கலையும் தெரிவித்தன. செய்தித்துறை, விளம்பரத் துறை போன்றவற்றில் வேலை செய்வோர் கருத்தாய்வில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. வேலைப் பின்னணி அவர்களின் பதில்களில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுப்பது அதன் நோக்கம்.

விலைவாசி உயரும் என்று கருதுவோரிடையே 57.8 விழுக்காட்டினர், ஹமாஸ், இஸ்ரேல், உக்ரேன், ர‌‌ஷ்யா, ஈரான் முதலியவை சம்பந்தப்பட்ட சர்ச்சைகளையும் அரசியல் சூழலில் நிலவும் நிச்சயமற்றதன்மையையும் காரணங்களாகச் சுட்டினர். விநியோக நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறுகளை 14.3 விழுக்காட்டினரும் தீர்வைகள் போன்ற வர்த்தகக் கொள்கைகளில் நிலவிய நிச்சயமற்றதன்மையை 9.4 விழுக்காட்டினரும் காரணங்களாகக் கூறியிருந்தனர்.

“விலைவாசி உயர்வு பற்றிப் பயனீட்டாளர்கள் அறிந்துள்ளனர். இருப்பினும், வாழ்க்கைச் செலவைப் பொறுத்தவரை பெரிய அளவில் மாற்றம் எதுவும் தென்படவில்லை,” என்றார் டாக்டர் பைக்.

பயனீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் செலவு செய்வதற்கு ஏற்ப, பல்வேறு துறைகளில் மாறுபட்டிருந்தன.

போக்குவரத்தில் பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்பு 3.5 விழுக்காட்டிலிருந்து 3.8 விழுக்காட்டுக்கு அதிகரித்தது.

தகவல், தொடர்புத் துறையில் அது 2.2 விழுக்காட்டிலிருந்து 2.5 விழுக்காட்டுக்குக் கூடியது. கணினிச் சில்லுகளுக்கான தேவை அதிகரித்ததே அதற்குக் காரணம்.

பணவீக்க எதிர்பார்ப்பு, மற்றச் சில துறைகளில் நிலையாக இருந்தது. உணவு, வீடமைப்பு, பயனீடுகள், இதரப் பொருள்கள், சேவைகளைப் பொறுத்தவரை அது 3 விழுக்காடாகவும் சுகாதாரப் பராமரிப்பில் 4 விழுக்காடாகவும் துணிமணி, காலணிகளில் 2 விழுக்காடாகவும் இருந்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பணவீக்கம்அரசியல்வர்த்தகம்ஆய்வு