தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சிம்’ பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புதிய $60 மி. நிதியம்

2 mins read
3d3ef928-58a7-44f7-be38-bf0868081d0b
‘சிம்’ எனப்படும் சிங்கப்பூர் நிர்வாகக் கழகத்தின் தலைவர் யூலின் கோ (வலது), அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் மாதிரி காசோலையை வழங்கினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘சிம்’ எனப்படும் சிங்கப்பூர் நிர்வாகக் கழகம், தனது 60ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி புதிதாக 60 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள நிதித்திட்டத்தை அறிவித்துள்ளது.

பல்வேறு உபகாரச் சம்பளங்கள், விருதுகள், திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் ஆறு மில்லியன் வெள்ளி, 2025 முதல் அடுத்த பத்து ஆண்டுகளுக்குச் செலவிடப்படும்.

வேலையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கான கற்றல் வாய்ப்புகளையும் இந்தத் திட்டம் ஆதரிக்கும் என்றும் பல்கலைக்கழகம், தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளாகச் சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் மேற்கூறப்பட்ட காரணங்களுக்காக அந்தப் பள்ளி செலவிடும் ஒரு மில்லியன் வெள்ளியைக் காட்டிலும், இந்தப் புதிய வருடாந்தர தொகை ஆறு மடங்காக உள்ளது.

அத்துடன், நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்குப் புதிதாக இரண்டு விருதுகளையும் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்யவுள்ளது.

கிளமெண்டியிலுள்ள ‘சிம்’ பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமையன்று (நவம்பர் 28) நடைபெற்ற ‘சிம் 60’ கற்றல் விழாவில் அந்த நிதியம், அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.

அதிபர் தர்மன் சண்முகரத்னம் வருகையளித்து சிறப்பித்த இந்நிகழ்ச்சிக்கு டிபிஎஸ் குழுமத்தலைவர் பியூஷ் குப்தாவும் இயு யான் சாங் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் இயூவும் வருகையளித்தனர்.

வர்த்தகத் தலைவர்கள், கல்வியாளர்கள் எனக் கிட்டத்தட்ட 600 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஹார்வர்ட்-கென்னடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் டீன் வில்லியம்ஸ், நல்ல தலைமைத்துவம் சார்ந்த தொடக்க உரை ஒன்றை ஆற்றினார்.

அதன் பிறகு, ‘இடைவெளிகளுக்கு இடையே பாலம் அமைத்தல்: மீள்திறன்மிக்க சிங்கப்பூருக்கான சமூக முன்னேற்றத்திற்கான ஆற்றலை வழங்குதல்’ என்ற கலந்துரையாடலில் திரு குப்தாவும் திரு இயூவும் வாழ்க்கை, வேலை ஆகியவை குறித்து வெளிப்படையாகப் பேசினர்.

குறிப்பாக, திரு குப்தா, தமது வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் அனுபவித்த மன அழுத்தத்தைப் பற்றி நினைவுகூர்ந்தார். அதன் பிறகு, தம் வாழ்க்கைத் தொழில் பற்றிய கண்ணோட்டம், தமது நலன்களை மட்டும் சார்ந்த ஒரு பார்வையிலிருந்து தம் வேலையால் சமுதாயத்திற்கு அடையும் நற்பயன்களைப் பற்றிய சிந்தனைக்கு மாறியதாகத் திரு குப்தா கூறினார்.

சிங்கப்பூரின் சமூகச் சேவைத் துறையை மேம்படுத்துவதற்கான நீடித்த திறன்களை வளர்க்க முற்படும் டாக்டர் ரிச்சர்ட் கே.எம்.யு -சிம் சமூக தொழில்முனைப்பு நிலையத்திற்கு புதிய நிதியம் உரமூட்டும்.

அத்துடன், பல்கலைக்கழகத்தின் வேலையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட வாழ்நாள் கற்றல் திட்டங்களையும் வேலைப்பயிற்சிக்கான திட்டங்களையும் புதிய நிதியம் ஆதரிக்கும்.

குறிப்புச் சொற்கள்