இந்தோனீசியாவில் கற்றல் மையங்களை அமைக்கும் ‘சிம்’

இந்தோனீசியாவில் கற்றல் மையங்களை அமைக்கும் ‘சிம்’

2 mins read
efc4ea46-7e36-4c77-976d-74f2157fc65a
ஜகார்த்தாவில் நடந்த கல்விக்கழகத்தின் 60வது ஆண்டு விழாவில் அதன் பேராசிரியர் வீ குவோக் கீ, இயக்குநர் சபைத் தலைவர் யூலீன் கோ, இந்தோனீசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் குவோக் ஃபூக் செங் ஆகியோர். - படம்: பிஸினஸ் டைம்ஸ்

ஜகார்த்தா: இந்த ஆண்டு 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தனியார் கல்வி அமைப்பான சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக் கழகம் (சிங்கப்பூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - சிம்) இந்தோனீசியாவில் கற்றல் மையங்களை அமைக்க திட்டமிடுகிறது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜகார்த்தாவில் அதன் முதல் அலுவலகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உள்ளூர் கல்வி அறக்கட்டளையான யயாசன் ஹலுவான் அபாடி செஜஹ்தேராவுடன் இணைந்து பாத்தாமில் தனது முதல் கல்வி மையத்தை நிறுவ சிம் திட்டமிட்டுள்ளது.

அங்கு தேர்ச்சி பெறும் இந்தோனீசிய மாணவர்கள் பட்டயம், பட்டப் படிப்புகளை சிங்கப்பூரில் உள்ள கல்விக் கழகத்தில் தொடர வாய்ப்பளிக்கப்படும் என்று கல்விக் கழகத்தின் சந்தைப்படுத்தல் தகவல்தொடர்பு இயக்குநர் ஜெரால்ட் லம் தெரிவித்தார்.

வெளிநாட்டுக் கற்றல் மையத்தின் பங்காளிகள், முதல் ஆண்டில் அங்கு படிக்கும் வசதியை ஏற்படுத்துவார்கள். இரண்டாம், மூன்றாம் ஆண்டு படிப்புகளை சிங்கப்பூரில் தொடர, நிதியைச் சேமிக்க இது உதவும் என்று புதன்கிழமை (ஜூலை 24) ஜகார்த்தாவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

வெளிநாட்டுக் கற்றல் மையங்கள் மூலம் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 500 இந்தோனீசிய மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர வாய்ப்புக் கிடைக்கும்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சிங்கப்பூரில் சிம் வழங்கும் படிப்புகளை அவர்கள் படிக்கலாம் என்று சிம் பேராசிரியர் வீ கொக் வீ குறிப்பிட்டார்.

சுரபாயா, பலெம்பாங்கில் உள்ள இரு உயர்நிலைப் பள்ளிகளுடன் புரிந்துணர்வுக் குறிப்பில் கல்விக் கழகம் கையெழுத்திட்டுள்ளது.

இந்தப் பங்காளித்துவம் சிம், அப்பள்ளி மாணவர்களின் கல்வித் தேவைகளை மதிப்பிடவும், கருத்தரங்குகள், பயிலரங்கு ஆகியவற்றை ஏற்பாடு செய்யவும், உபகாரச் சம்பள நேர்காணல் நடத்தவும் வகை செய்யும்.

அண்மை ஆண்டுகளில் சிம் தனது செயல்பாடுகளை 18 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இந்தோனீசியா தவிர்த்து, மலேசியா, பிலிப்பீன்ஸ், வியட்னாம், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பிரதிநிதித்துவ அலுவலகங்களை சிம் அமைத்துள்ளது.

வெளிநாடுகளில் படிக்க விழையும் இந்தோனீசிய மாணவர்களின் விருப்பத் தெரிவாக முதலிடத்தில் இருக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என இந்தோனீசியக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்