சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் அதன் பொங்கோல் வளாகத்துக்கு முழுமையாக இடமாறியுள்ளது.
மே மாதத்திலிருந்து அது அங்கு முழுமையாகச் செயல்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் ஏறத்தாழ 11,000 மாணவர்களும் 1,300 ஊழியர்களும் உள்ளனர்.
பொங்கோல் வளாகத்தின் அதிகாரபூர்வத் தொடக்க விழா செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும்.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் சிங்கப்பூரின் முதல் பயன்பாட்டுக் கற்றல் பல்கலைக்கழகமாகும்.
பயன்பாட்டுக் கற்றலை நடைமுறைபடுத்தி தொழில்சார்ந்த பங்காளிகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த அது இலக்கு கொண்டுள்ளது.
இதற்கு முன்பு சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்துக்கு ஆறு வளாகங்கள் இருந்தன.
பொங்கோல் வளாகம் ஜேடிசி வர்த்தகப் பூங்காவுக்குப் பக்கத்தில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் 42,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கேம்பஸ் கோர்ட் எனும் பகுதி கோனி தீவு நீர்முகப்புக்கு எதிர்ப்புறத்தில் உள்ளது.
அப்பல்கலைக்கழகத்தின் 49,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கேம்பஸ் ஹார்ட் பகுதியின் ஓர் அம்சமாக பொங்கோல் மரபுடைமைப் பாதை உள்ளது.
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் ஒரு பகுதியாக சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் உள்ளது.
அதன் பெருந்திட்டத்தை ஜேடிசி கார்ப்பரேஷன் வடிவமைத்தது.
“ஜேடிசி வர்த்தகப் பூங்கா வளாகத்துக்குப் பக்கத்தில் உள்ளது. தொழில்சார்ந்த பங்காளிகளுடன் வலுவான ஒத்துழைப்பைக் கொண்டிருக்க இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வேலை அனுபவப் பயிற்சி வாய்ப்புகளை இது வழங்குகிறது,” என்று சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் இணை உதவித் தலைவர் ஜெரி வீ ஹுவீ ஜூன் தெரிவித்தார்.
புதிய வளாகத்தில் உள்ள புதிய ஆய்வுக்கூடங்களைச் செய்தியாளர்கள் செப்டம்பர் 3ஆம் தேதியன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.