கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாக அமைந்த கலைநிகழ்ச்சியுடன் இந்த ஆண்டின் சிங்கப்பூர் அனைத்துலகக் கலைவிழா (சிஃபா) வெள்ளிக்கிழமை (மே 16) சிறப்பாகத் தொடங்கியுள்ளது.
பிடோக் நகரச் சதுக்கத்தில் (Bedok Town Square) ‘கடலும் அக்கம்பக்கமும்’ (The Sea and the Neighbourhood) என்ற தலைப்பிலான தொடக்க நிகழ்ச்சி இலவசமாக நடைபெற்றது. பிடோக் வட்டாரத்தின் கடலோர மரபு, சமூக ஒற்றுமை, நகர்ப்புற மாற்றங்கள் முதலியவற்றை இசை, நடனம், காட்சிக் கலைகள் வழியாக உயிரோட்டத்துடன் அது வெளிப்படுத்தியது.
தேசியக் கலை மன்றத்தின் ஆதரவுடன் ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ ஏற்பாட்டில் 48வது முறையாக நடத்தும் இந்த வருடாந்தர கலைவிழா, இந்த ஆண்டு ‘மோர் தேன் எவர்’ (More Than Ever) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டுள்ளது.
சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு சிங்கப்பூர்க் கலாசார அடையாளத்தின் வளர்ச்சியை ‘சிஃபா’ விழா கொண்டாடுகிறது. சாதனையளவாக, இம்முறை 15 உள்ளூர்ப் படைப்புகள் விழாவில் இடம்பெறுகின்றன.
சிங்கப்பூரை உள்நாட்டிலும், உலக அளவிலும் படைப்பாற்றல் மிக்க கலை மையமாக உறுதிப்படுத்தும் வண்ணம், மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதிவரை, பல்வேறு கலை வடிவங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தொடக்க நிகழ்ச்சியின் மையத்தில், கலைஞர் வாங் ரூோபிங் உருவாக்கிய பவழப் பாறைபோல் வடிவமைக்கப்பட்ட கலைப்பொருள் இடம்பெற்றிருந்தது. இது, நிகழ்ச்சிக்கான மேடையாகவும், சுற்றுச்சூழலைப் பிரதிபலிக்கும் சின்னமாகவும் அமைந்தது.
இந்நிகழ்ச்சியில், டாக்டர் ஃபிலிப் டானின் இசையமைப்பில், நடனக் கலைஞர் கிறிஸ்டினா சானின் இயக்கத்தில் சிங்கப்பூர் ‘பாலே’ அமைப்பின் நடனமும் திரு பிரையன் கோதோங் டானின் காணொளி மற்றும் இட வடிவமைப்பும் ஒன்றிணைந்து ஒரு மாபெரும் கலைவிருந்தாக படைக்கப்பட்டது.
இதில், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிகழ்ச்சியில் பன்சூரி புல்லாங்குழலை வாசித்த இசைக்கலைஞர் ராகவேந்திரன் ராஜசேகரன், சிங்கப்பூரின் முன்னணிக் கலைஞர்களுடன் இணைந்து மேடையேறிய இந்த அரிய வாய்ப்பு குறித்துப் பேசினார்.
“இது ஒரு பிரம்மாண்டமான கலைப் படைப்பும் அனுபவமும் ஆகும். நூற்றுக்கும் அதிகமான திறமையான கலைஞர்களின் ஒன்றுபட்ட முயற்சியின் பயனாக இந்தக் கலைப் படைப்பு பிறந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
பலவேறு கலைகளைக் கொண்ட இந்த மேடைப் படைப்பில், பாரம்பரிய இந்திய பன்சூரி இசையை இயல்பாக இணைத்து வடிவமைக்க முடிந்தது மிகுந்த மனநிறைவளித்ததாக ராகவேந்திரன் தெரிவித்தார்.
“நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். எடுத்துக்காட்டாக, நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில், பின்னனி இசை திடீரென நிறுத்தப்படும்போது, நடனக் கலைஞர்கள்தான் இசைக்கலைஞர்களுக்குச் சைகை மூலம் உணர்த்துவார்கள்.
“இயக்கம், ஒலி, வடிவமைப்பு ஆகியவற்றுக்கு இடையே இணக்கமான தொடர்பு உள்ளது. இதன் சில பகுதிகளை நீங்கள் நேரடியாகப் பார்க்கலாம். ஆனால் திரைக்குப் பின்னால் இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று அவர் விளக்கினார்.
இதுபோன்ற கலைநிகழ்ச்சிகளைச் சமூக மையங்களில் இலவசமாக வழங்குவது மிகவும் அர்த்தமுள்ளது என்றார் ராகவேந்திரன்.
“சிங்கப்பூரின் கலைத்துறை எவ்வளவு விரிவானது என்பதை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது. இதை இலவசமாகக் காணும் மக்களுக்கு, பணம் செலுத்திக் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்ற சிந்தனை உருவாகும்,” என்று அவர் சொன்னார்.
‘கடலும் அக்கம்பக்கமும்’ நிகழ்ச்சி, மே 18ஆம் தேதிவரை, இரவு 7.30 மணிக்கு பிடோக் நகரச் சதுக்கத்தில் அமைந்துள்ள ‘சிஃபா’ அரங்கில் இலவசமாக நடைபெறும்.

