பாரிஸ் நகர ஓஇசிடி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க சிங்கப்பூருக்கு அழைப்பு

1 mins read
bd7af7d9-a880-4a51-986b-e9a7afa154e9
கோஸ்டா ரிக்கா அமைச்சர் டோவர் ரிவேரா. - கோப்புப் படம்: விக்கிபீடியா

கோஸ்டா ரிக்கா வெளியுறவு அமைச்சர் மானுவேல் டோவர் ரிவேரா, ஜூன் மாதத்தில் பாரிஸ் நகரில் நடைபெறும் ஓஇசிடி அமைச்சர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்க சிங்கப்பூருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

திரு டோவர், ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருந்தார். அப்போது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய அவர், சிங்கப்பூர் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங்கைச் சந்தித்தபோது அந்த அழைப்பை விடுத்ததாகச் சொன்னார்.

“சிங்கப்பூர் சிறந்த நண்பர் என்ற முறையில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளேன்,” என்று திரு டோவர் கூறினார்.

கோஸ்டா ரிக்கா பற்றிய கருத்தரங்குக்கு திரு டோவர் இணைத் தலைவராக உள்ளார்.

“நாங்கள், ஓஇசிடிக்கும் தென்கிழக்கு ஆசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு கட்டமைப்பை புதுப்பிக்கப் போகிறோம். நாங்கள் ஆலோசித்த விவகாரங்களில் அதுவும் ஒன்று,” என்று திரு டோவர் கூறினார்.

ஓஇசிடி எனும் பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டுக்கான அமைப்பு அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள், வெளியுறவு அமைச்சர்கள், பங்காளி நாடுகளின் பிரதிநிதிகளை ஒன்றாக இணைக்கிறது.

சிங்கப்பூர் தவிர ஆசியான் உறுப்பு நாடுகளில் வியட்னாமுக்கும் திரு டோவர் அழைப்பு விடுத்துள்ளார். ஜூன் 3, 4 தேதிகளில் அந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது

குறிப்புச் சொற்கள்