சாங்கி விமான நிலையத்திலிருந்து ஜகார்த்தா நோக்கிப் புறப்படவிருந்த கருடா இந்தோனீசியா விமானத்தில் பாதுகாப்புக் குறைபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மார்ச் 25ஆம் தேதி, பிற்பகல் 12.55 மணிக்குப் புறப்பட வேண்டிய ‘GA829’ என்ற விமானத்தில் பயணிகள் ஏறிக்கொண்டிருந்தனர்.
அப்போது, விமானத்தின் வால் பகுதியில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய ஒரு குறைபாட்டை விமான ஊழியர்கள் கண்டறிந்தனர்.
இது குறித்து மார்ச் 27ஆம் தேதி கருடா இந்தோனீசியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “விமானப் பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து ஒன்றை ஊழியர்கள் கண்டறிந்தனர். பயணிகளைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. பயணிகள் அனைவரும் மீண்டும் விமானத்தில் ஏறுவதற்கான வாயிலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்,” எனத் தெரிவித்தது.
மேலும், பயணிகளை விரைவாக வெளியேற்றுவதற்காக, ஏரோபிரிட்ஜ் (Aerobridge) எனப்படும் நடைபாலம், விமானத்தின் பின்புறக் கதவுகளில் உள்ள அவசரகாலச் சறுக்குப் பாதைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன என்றும் அது கூறியது.
பயணிகள் மாற்று விமானம் மூலம் ஜகார்த்தாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் கருடா இந்தோனீசியா உறுதிப்படுத்தியது.
இருப்பினும், அந்தப் பாதுகாப்புக் குறைபாடு குறித்தோ மாற்று விமானம் எவ்வளவு நேரம் தாமதமாகப் புறப்பட்டது என்பது பற்றியோ விரிவான தகவல்களை அது வெளியிடவில்லை.

