நிச்சயமற்ற உலகச் சூழலில் இணைந்து பணியாற்றுவதற்கான கடப்பாட்டைச் சிங்கப்பூர் - ஜப்பான் உத்திப்பூர்வ பங்காளித்துவம் உணர்த்துவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
அரசதந்திர உறவுகளின் 60ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜப்பானிய இளவரசி ஐக்கோ ஐந்து நாள் அதிகாரத்துவப் பயணமாகச் சிங்கப்பூர் வந்துள்ளார். அவருக்கு, புதன்கிழமை (நவம்பர் 18) இஸ்தானா மாளிகையில் அதிபர் தர்மன் மதிய விருந்தளித்தார்.
அந்நிகழ்வில் பேசிய அதிபர் தர்மன், இரு நாடுகளும் இணைந்து நீண்ட பயணம் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 1960களில் சிங்கப்பூரில் முதலீடு செய்த முன்னோடி நிறுவனங்களில் ஜப்பானிய நிறுவனங்களும் அடங்கும் என்றார்.
அம்முதலீடுகள் உற்பத்தித் துறையில் பெண்கள் உட்படப் பலருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கின. இதன்வழி சிங்கப்பூர் திறன்களையும் ஆற்றல்களையும் வளர்த்துப் பொருளியல் மேம்பாட்டில் முன்னேறியது.
இன்று சிங்கப்பூர், ஜப்பானின் மூன்றாவது பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளராகத் திகழ்கிறது என்பதையும் சுட்டினார்.
புதிய துறைகள்
“இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு, இணையப்பாதுகாப்பு, மின்னிலக்க உள்கட்டமைப்பு, பசுமைப் பொருளியல் போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த அதே உணர்வு நம்மை வழிநடத்த வேண்டும்,” என்று அதிபர் தர்மன் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் பிரதமர் லாரன்ஸ் வோங் தோக்கியோ சென்றபோது, பிரதமர் சானே தக்காய்ச்சியுடன் இணைந்து உத்திப்பூர்வ பங்காளித்துவத்தை அறிவித்தார். மின்னிலக்கமயமாதல், தற்காப்பு, எரிசக்தி, அமைப்பு ரீதியான பரிமாற்றங்கள் ஆகிய ஐந்து துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இது வழிவகுக்கும்.
தொழில்நுட்பம், நீடித்த நிலைத்தன்மை, கல்வி எனப் பன்முகத்தன்மை கொண்டதாக இப்பங்காளித்துவம் விளங்குகிறது. முதுமையிலும் சுறுசுறுப்பாகவும் கண்ணியத்துடனும் வாழ்வது குறித்த பாடங்களையும் இரு தரப்பும் பகிர்ந்துகொள்கின்றன.
வளரும் நட்பு
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அப்போதைய பட்டத்து இளவரசர் அகிஹிட்டோவும் இளவரசி மிச்சிக்கோவும் ஜூரோங் ஏரியிலுள்ள ஜப்பானியப் பூங்காவில் இரு பனை மரங்களை நட்டனர். 2006ஆம் ஆண்டு பேரரசராகவும் பேரரசியாகவும் திரும்பியபோது அவற்றைப் பார்வையிட்டனர்.
அம்மரங்களின் தொடர்ச்சியான வளர்ச்சி இருதரப்பு உறவின் செழிப்பைக் காட்டுவதாக அதிபர் குறிப்பிட்டார். இளவரசி ஐக்கோ ‘ஜூரோங் லேக்’ பூந்தோட்டங்களில் மரக்கன்று நடுவார் என்றும், சிங்கப்பூர் பூமலையில் புதிய ஆர்க்கிட் மலருக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மதிய விருந்தில் ஜப்பானிய மொழியில் பேசிய இளவரசி ஐக்கோ, சிங்கப்பூரில் ஜப்பானிய உணவும் மக்கள் பண்பாடும் பிரபலமாக இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
அனைத்துலகச் சட்டத்தைப் பேணுவதன் மூலமும் இருதரப்புப் புரிந்துணர்வின் மூலமும் அமைதியைக் கட்டிக்காக்க வேண்டும் என்று அதிபர் தர்மன் வலியுறுத்தினார்.
