சிங்கப்பூர்- ஜப்பான் கரிமத் தீர்வு உடன்பாடு

சிங்கப்பூர்- ஜப்பான் கரிமத் தீர்வு உடன்பாடு

1 mins read
c6353c31-9b1c-4694-9d16-d310f27d18a1
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உடன்பாட்டின் நோக்கம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கரிமத் தீர்வுக்கான உடன்பாடு ஒன்றில் சிங்கப்பூரும் ஜப்பானும் கையெழுத்திட்டு உள்ளன.

மாசு ஏற்படுத்தும் அம்சங்களில் இருந்து கரிமத்தைப் பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் சார்ந்த பருவநிலைத் தீர்வு அது.

அவ்வாறு பிரித்து எடுக்கப்படும் கரிமத்தைச் சேமிப்பதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உடன்பாட்டின் நோக்கம்.

ஜகார்த்தாவில் கரிம வெளிப்பாடற்ற ஆசிய சமூகத்தின் இரண்டாவது அமைச்சர்நிலை மாநாடு நடைபெற இருக்கும் வேளையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 21) அந்த உடன்பாடு கையெழுத்தானதாக வர்த்தக தொழில் அமைச்சு கூறியது.

வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங்கும் ஜப்பானின் பொருளியல், வர்த்தக, தொழில் அமைச்சர் கென் சேய்த்தோவும் அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

வெளிநாட்டில் பிரித்து எடுக்கப்பட்ட கரிமத்தைச் சேமிக்கும் சிறந்த நடைமுறைகள் தொடர்பான அறிவாற்றலையும் அது தொடர்பான தொழில்நுட்பத்தையும் பகிர்ந்துகொள்ளவும் உடன்பாடு உதவும்.

சிங்கப்பூர் அதன் கரிமத்தைச் சேமிக்க இந்தோனீசியாவிற்கு ஏற்றுமதி செய்வதை ஆராய்ந்து வருகிறது. ஜப்பான் 2050ஆம் ஆண்டுக்குள் 120 முதல் 240 மில்லியன் டன்கள் வரை கரிமத்தைச் சேமிக்கத் திட்டமிடுகிறது. அதாவது அதன் மொத்த தற்போதைய வெளியேற்றத்தில் அது குறைந்தது 10 விழுக்காடு. இந்த வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் கரிமத்தைச் சேமிப்பதில் இரு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்