மத்திய கிழக்கில் நீடித்துவரும் பதற்றமான சூழலைக் கருத்தில்கொண்டு, சிங்கப்பூருக்கும் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கும் இடையிலான தனது விமானச் சேவைகளின் ரத்தை ஜூன் 20ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட் தெரிவித்துள்ளது.
இந்த விமானச் சேவைகள் மே 31 வரை ரத்து செய்யப்படுவதாக ஸ்கூட் முன்னதாக அறிவித்திருந்தது. சிங்கப்பூரிலிருந்து ஜெட்டா செல்லும் டிஆர்796 விமானச் சேவைகளும் ஜெட்டாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பும் டிஆர்797 விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தங்களது பயணத்தைத் தொடர விரும்பாவிட்டால், தாங்கள் செலுத்திய கட்டணத்தை முழுமையாகத் திரும்பப் பெறக் கோரலாம் என்று வெள்ளிக்கிழமை (மே 29) ஸ்கூட் அதன் இணையப்பக்கத்தில் குறிப்பிட்டது.
அதோடு, மாற்று ஸ்கூட் விமானச் சேவைகளில் அவர்கள் தங்களது பயணத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ஸ்கூட்டிடம் நேரடியாகப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தைத் திரும்பப் பெற மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்.
பயண முகவர்கள் அல்லது பங்காளித்துவ விமான நிறுவனங்கள் மூலம் முன்பதிவு செய்தவர்கள், தேவையான உதவிகளைப் பெறத் தங்களது முகவர்களையோ பயணச்சீட்டை விற்ற விமான நிறுவனத்தையோ நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

