சிங்கப்பூர் - ஜோகூர் விரைவு ரயில் கட்டமைப்பு இணைப்பு (ஆர்டிஎஸ்) செயல்படத் தொடங்கும்போது, ரயில்வே பாதுகாப்பு, எல்லை தாண்டிய சம்பவங்களைச் சிங்கப்பூர், மலேசியா எவ்வாறு கையாளும் என்பதை வரையறுக்கும் புதிய சட்டங்களைச் செவ்வாய்க்கிழமை (மே 5) சிங்கப்பூர் நிறைவேற்றியது.
சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த், ஜோகூர் பாருவின் புக்கிட் சாகர் ஆகிய இரு இடங்களில் அமைக்கப்படும் ஆர்டிஎஸ் இணைப்பு ரயில் நிலையங்களில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிநுழைவுச் சோதனைகளுக்கும் இந்தப் புதிய சட்டம் பொருந்தும்.
அந்த நான்கு கிலோமீட்டர் ரயில் இணைப்பில், எல்லை தாண்டிய சம்பவங்களை நிர்வகிப்பதற்கான கட்டமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சரும் உள்துறைக்கான இரண்டாவது அமைச்சருமான எட்வின் டோங் விவரித்தார்.
ஆர்டிஎஸ் இணைப்பு, இவ்வாண்டு டிசம்பரில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோளாற்றால் பாதிக்கப்பட்ட ரயிலால் தொடர்ந்து பயணம் செய்ய முடிந்தால், அது எங்குச் சென்று நிற்கிறதோ அந்த ரயில் நிலைய அதிகாரிகள் அப்பிரச்சினையைக் கையாள்வர்.
ஆனால், கோளாற்றால் ரயில் நடுவழியில் நின்றுவிட்டால், அது எந்த நாட்டில் நிற்கிறதோ அந்த நாடு ரயிலின் பிரச்சினையைச் சரிசெய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்.
மலேசிய எல்லையான தூண் 47க்கும் சிங்கப்பூர் எல்லையான தூண் 48க்கும் இடையே ரயில் நின்றுவிட்டால், கோளாற்றுக்கு யார் பொறுப்பேற்பது என்பதைத் தீர்மானிக்க ரயிலின் முன்பகுதி பயன்படுத்தப்படும்.
ரயிலின் முன்பகுதி எந்த நாட்டில் இருக்கிறதோ அந்த நாடு முதன்மைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சம்பவ மேலாளராகச் செயல்பட்டு அப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் நோக்கி வரும் ரயிலுக்கு, அதன் முன்பகுதி தூண் 48ஐ கடக்கும் வரை மலேசியா சம்பவ மேலாளராக இருக்கும். அதன்பிறகு, ரயிலின் பெரும்பகுதி மலேசியாவில் இருந்தாலும் சிங்கப்பூர் பொறுப்பேற்கும் எனத் திரு டோங் கூறினார்.
மலேசியா நோக்கிச் செல்லும் ரயிலுக்கு, அதன் முன்பகுதி தூண் 47ஐ கடக்கும் வரை சிங்கப்பூர் சம்பவ மேலாளராக இருக்கும்; அதன்பிறகு, ரயிலின் பெரும்பகுதி சிங்கப்பூரில் இருந்தாலும் மலேசியா பொறுப்பேற்கும் என்றார் அவர்.
தூண் 47க்கும் தூண் 48க்கும் இடையே ரயில் செல்லாத நேரத்தில் தண்டவாளத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், எந்த நாட்டின் அதிகாரிகள் முதலில் சம்பவ இடத்திற்கு விரைகின்றனரோ அந்த நாடே அச்சம்பவத்தைக் கையாளும்.
அனைத்து எல்லை தாண்டிய சம்பவங்களுக்கும் ஒரு நாடு சம்பவ மேலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன், மற்றொரு நாட்டின் கோரிக்கையின் பேரில் உதவி செய்யும்.
அவசர காலங்களில் மலேசியாவில் சிங்கப்பூர் அதிகாரிகளும் சிங்கப்பூரில் மலேசிய அதிகாரிகளும் இணைந்து பணியாற்றுவர். இருப்பினும், அவர்கள் மற்ற நாட்டில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என டாக்டர் டோங் தெரிவித்தார்.

