அமைதி, மனிதாபிமானம், சேவைக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் கடப்பாடு உலக அரங்கில் நீடித்த மரபை விட்டுச்செல்வதாக பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
பிரதமர் வோங் திங்கட்கிழமை (டிசம்பர் 30) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், இந்த வட்டாரத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் பேணுவதில் அமெரிக்கா ஆற்றிய பங்கிற்கு திரு கார்ட்டர் அதிக மதிப்பளித்ததாகக் கூறினார்.
ஆக நீண்டநாள் உயிர் வாழ்ந்த முன்னாள் அமெரிக்க அதிபரான திரு கார்ட்டர், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) காலமானார். அவருக்கு வயது 100.
இந்நிலையில், அமெரிக்காவுடன் சேர்ந்து சிங்கப்பூரும் திரு கார்ட்டரின் மறைவுக்குத் துக்கம் அனுசரிப்பதாக பிரதமர் வோங் சொன்னார்.
“அதிபராக அவரது பதவிக்காலத்தில், 1977ல் ஆசியான் கலந்துரையாடல் பங்காளியானது அமெரிக்கா. அதற்கு அடுத்த ஆண்டு, வாஷிங்டனில் நடத்தப்பட்ட முதல் ஆசியான்-அமெரிக்கா அமைச்சர்நிலைச் சந்திப்பில் திரு கார்ட்டர் பங்கேற்றார்,” என்றார் பிரதமர் வோங்.
சிங்கப்பூரையும் ஆசியான் வட்டாரத்தையும் பற்றிய உண்மைகளை திரு கார்ட்டர் அறிந்திருந்தது, அப்போது சிங்கப்பூர் பிரதமராக இருந்த திரு லீ குவான் யூவை கவர்ந்ததாக பிரதமர் வோங் சொன்னார்.
“சிங்கப்பூர் மற்றும் ஆசியானின் நல்ல நண்பராக அவர் அன்புடன் நினைவுகூரப்படுவார். இந்த நேரத்தில் அவரின் குடும்பத்தாருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார் பிரதமர் வோங்.

