சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிஞ்சரின் துணைவியார் திருவாட்டி நான்சி கிஸிஞ்சருக்கு இரங்கல் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு செய்தியாளர் அறிக்கை ஒன்றில் அதனைத் தெரிவித்தது.
டாக்டர் கிஸிஞ்சர் புதன்கிழமையன்று அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக, அவரது புவிசார் அரசியல் ஆலோசனை நிறுவனமான ‘கிஸிஞ்சர் அசோசியேட்ஸ்’ தெரிவித்தது.
தனிப்பட்ட குடும்ப நிகழ்வில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்படும் என்றும் பின்னொரு தேதியில் நியூயார்க் சிட்டியில் அவருக்குப் பொது நினைவஞ்சலி சேவை நடத்தப்படும் என்றும் அது தெரிவித்தது.
இந்நிலையில் திருவாட்டி கிஸிஞ்சருக்கு அனுப்பிய கடிதத்தில், தாமும் தம் துணைவியார் திருவாட்டி ஹோ சிங்கும் டாக்டர் கிஸிஞ்சரின் இறப்பைக் கேட்டு ஆழ்ந்த சோகத்தில் இருந்ததாகத் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் பலர் டாக்டர் கிஸிஞ்சரை நினைவில் வைத்திருப்பார்கள் என்றார் அவர்.
டாக்டர் கிஸிஞ்சர் ஒப்பிட்டுப் பார்க்கமுடியாத ஓர் அரசதந்திரி, உண்மையான அரசியல்வாதி, அவருடைய காலத்தில் தொலைநோக்குப் பார்வையுடைய ஒருவர் என்று திரு லீ குறிப்பிட்டார். ஒரு தலைவராக அவர் நடைமுறைக்கேற்ற விதத்தில் உறுதியுடன் செயல்பட்டதாகப் பிரதமர் லீ கூறியுள்ளார்.

