கொரியப் பொருள்களை வாங்குவதில் சிங்கப்பூர் முன்னிலை

கொரியப் பொருள்களை வாங்குவதில் சிங்கப்பூர் முன்னிலை

2 mins read
e0a40989-a240-4b9f-93d9-7df370f9199d
லசாடா செயலியில் இடம்பெற்றுள்ள ஜிமார்க்கெட் 800,000க்கும் மேற்பட்ட தென்கொரியப் பொருள்களை விற்பனை செய்கிறது. - படம்: லசாடா

லசாடா செயலி வழியாக கொரிய விற்பனையாளர்களிடமிருந்து நேரடியாகக் கொரியப் பொருள்களை வாங்குவதில் தென்கிழக்கு ஆசியாவிலேயே சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட லசாடா-ஜிமார்க்கெட் கூட்டு முயற்சியால் லசாடா செயலியில் தென் கொரியாவிலிருந்து 800,000க்கும் மேற்பட்ட பொருள்களை வாங்க முடியும்.

இந்தப் பொருள்கள் அனைத்தும் சிங்கப்பூர் வெள்ளியிலேயே விலை குறிக்கப்பட்டுள்ளது. அவை, ஆங்கில விளக்கங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளன. இதனால் வலுவான வாங்கும் திறன் கொண்ட சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட தென்கொரியப் பொருள்ககளை எளிதாக வாங்க முடிகிறது.

தென் கொரியாவின் ‘ஜிமார்க்கெட்’ தலைமை நிர்வாக அதிகாரியான ஜேம்ஸ் சாங், “ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிக தொகையைச் செலவிடுபவர்களில் சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்,” என்றார்.

மின்னணுப் பொருள்கள் அதிகம் வாங்கப்படுவதே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறிய அவர், மலேசியா, பிலிப்பீன்சும் இதில் முன்னணியில் இருப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற லசாடாவின் ‘6.6’ சிறப்பு விற்பனையின்போது, சிங்கப்பூரில் ஜிமார்க்கெட்டிலிருந்து வாங்கப்பட்ட சராசரி பொருள்களின் மதிப்பு, சாதாரண விற்பனை நாள்களைவிட 146 விழுக்காடு அதிகம் என்றார்.

இது தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் சராசரி உயர்வான 75 விழுக்காட்டைவிட மிக அதிகம்.

லசாடா நிறுவனம், சீனாவின் அனைத்துலகத் தொழில்நுட்பம், மின்வர்த்தக கூட்டு நிறுவனமான அலிபாபா குழுமத்தின் ஒரு துணை நிறுவனமாகும். அதேநேரத்தில், ஜிமார்க்கெட் நிறுவனம், தென்கொரியாவின் சில்லறை வர்த்தகக் கூட்டு நிறுவனமான ஷின்செகே குழுமம், அலிபாபா ஆகியவற்றின் கூட்டு முயற்சியின்கீழ் இயங்கி வருகிறது.

குறிப்புச் சொற்கள்