சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதித் துறை 2026 முதல் காலாண்டில் $5.08 பில்லியன் வழங்கீடு

புதிய காப்புறுதி விற்பனை 12.9% அதிகரிப்பு

சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதித் துறை 2026 முதல் காலாண்டில் $5.08 பில்லியன் வழங்கீடு

1 mins read
473c5804-07f7-49fa-9e34-79e6085e49a0
2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5,507 பேரின் ஆயுள் காப்புறுதித் திட்டங்களுக்கான கோரிக்கைகள் வெற்றிகரமாக ஏற்கப்பட்டன. இதன் விளைவாக, தீவிர நோய், மரணம், நிரந்தர உடற்குறைபாடு ஆகியவற்றுக்காக மொத்தம் $555 மில்லியன் வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதிச் சங்கத்தின் அறிக்கை சுட்டியது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ டைம்ஸ்

சிங்கப்பூரின் ஆயுள் காப்புறுதித் துறை 2026ன் முதல் காலாண்டில் காப்புறுதித் தொகைக் கோரிக்கை, முதிர்வுத் தொகையாக மொத்தம் $5.08 பில்லியன் வழங்கியுள்ளது.

இது 2021ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் காலாண்டில் வழங்கப்பட்ட ஆக அதிகபட்சத் தொகை.

புதிய காப்புறுதி விற்பனை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12.9 விழுக்காடு வளர்ச்சியடைந்து $1.67 பில்லியனை எட்டியுள்ளதாக சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதிச் சங்கம் புதன்கிழமை (மே 13) வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

மொத்த வழங்கீட்டில், மரணம், தீவிர நோய், நிரந்தர உடற்குறைபாடு போன்ற கோரிக்கைகளுக்காக $555 மில்லியன் வழங்கப்பட்டது.

முதிர்வடைந்த 87,402 காப்புறுதித் திட்டங்களுக்கு $4.52 பில்லியன் வழங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்கள் (IP) மூலம் சுகாதாரக் காப்புறுதித் கோரிக்கைகளுக்காக $712.1 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் மூப்படைந்து வரும் மக்கள்தொகை, அதிகரித்துவரும் மருத்துவச் சேவைகளின் பயன்பாடு ஆகியவை கோரிக்கைகள் அதிகரிக்க முக்கியக் காரணங்கள் என்று சங்கத்தின் நிர்வாக இயக்குநர் சான் வை கிட் கூறினார்.

நிச்சயமற்ற உலகப் பொருளியல் சூழலில், சிங்கப்பூரர்கள் தங்கள் நிதி நிலையை வலுப்படுத்தவும் நீண்டகாலத் திட்டமிடலில் ஈடுபடவும் அதிக ஆர்வம் காட்டுவதை இந்த வளர்ச்சி பிரதிபலிக்கிறது. தற்போது சிங்கப்பூரர்களில் 10ல் ஏழுக்கும் மேற்பட்டோர் ‘ஐபி’ காப்புறுதித் திட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்