மலாக்கா, சிங்கப்பூர் நீரிணைகளை அனைத்துலகக் கப்பல் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுகளுமின்றி, திறந்த மற்றும் பாதுகாப்பான பயணப் பாதைகளாகத் தொடர்ந்து வைத்திருக்கச் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா ஆகிய மூன்று கரையோர நாடுகளும் தங்களது கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
சிங்கப்பூரில் நடைபெற்ற 17வது ஒத்துழைப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்ட இந்நாடுகள், இது தொடர்பான கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டன. இந்த நிகழ்வில் தொடக்க உரையாற்றினார் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ்.
மலாக்கா, சிங்கப்பூர் நீரிணைகளைப் பாதுகாப்பானதாக வைத்திருக்க மூன்று நாடுகளும் தொடர்ந்து முனைப்புடன் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். ஒவ்வோர் ஆண்டும் உலகின் கடல்வழி வர்த்தகத்தில் நான்கில் ஒரு பங்கும் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கும் இந்நீரிணைகள் வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன.
ஆண்டுக்கு 100,000க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும் முக்கிய இடமாக இது திகழ்கிறது. எனினும், திறந்த கடல் பயணப் பாதைகளைப் எப்போதும் தன்னிச்சையாகப் பாதுகாப்பான ஒன்றாகக் கருதிவிட முடியாது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் சியாவ், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவாகச் சரிந்துள்ளதையும் அங்கே கப்பல்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதையும் உதாரணமாகக் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் புவிசார் அரசியல் மோதல்களும் பொருளியல் போட்டிகளும் தீவிரமடைந்து வரும் இச்சூழலில், மலாக்கா, சிங்கப்பூர் நீரிணைகள் விவகாரத்தில் கரையோர நாடுகளின் கூட்டு முயற்சி ஒரு மாற்றுப் பாதையைக் காட்ட முடியும் என்று அவர் கூறினார்.
125க்கும் மேற்பட்ட நாடுகளையும் அமைப்புகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கெடுத்த இந்தக் கருத்தரங்கில், நீரிணைகளில் புதிய தொழில்நுட்பங்கள், மாற்று எரிபொருள் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து கலந்துரையாடுவர்.


