சிங்கப்பூரின் உற்பத்தித் துறை தற்போது முக்கியமான கட்டத்தில் உள்ளது, 2025ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அதற்கு தகுந்த உதவிகள் வழங்கப்பட்டால் உலக அளவில் திறம்படச் செயல்பட முடியும் என்று சிங்கப்பூர் உற்பத்தித்துறை சம்மேளனம் (எஸ்எம்எஃப்) தெரிவித்துள்ளது.
உதவிகள் கிடைத்தால் சிங்கப்பூர் உற்பத்தித் துறைக்கு இது திருப்புமுனையாக இருக்கும் என்றும் சம்மேளனத்தின் தலைவர் லெனன் டான் கூறினார்.
சூழலுக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுப்பது, உலக நாடுகளின் அழுத்தம் போன்ற பல சவால்களை உற்பத்தித் துறை எதிர்கொண்டு வருகிறது. அதனால், இந்த வரவுசெலவுத் திட்டம் முக்கியமான ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
நீடித்த நிலைத்தன்மை, மனிதவளம், அனைத்துலகமயமாதல், உற்பத்தித்திறன் ஆகிய நான்கு பிரிவுகளில் அரசாங்கம் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்று சம்மேளனம் தெரிவித்தது.
மேலும், பசுமை மாற்றம், ஊழியர்களை எதிர்கால தொழில்நுட்பத்திற்குத் தயார் செய்வது, உலக வர்த்தகத்திற்கு ஆதரவு, அடுத்த கட்டத்திற்கு துறை மாற்றம், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு, சிறு நிறுவனங்களும் பெரிய நிறுவனங்களும் இணைந்து செயல்பட வாய்ப்புகள் ஆகியவற்றை அரசாங்கம் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அது கூறியது.
சம்ளேனம், 1932 முதல் செயல்பட்டு வருகிறது. அது சிங்கப்பூர் உற்பத்தித் துறையையும் அதைச் சார்ந்த நிறுவனங்களையும் பிரதிநிதித்து வருகிறது.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் எனக் கிட்டத்தட்ட 5,000 உறுப்பினர்கள் சம்மேளனத்தில் உள்ளனர்.
சம்ளேனம் கடந்த நவம்பர் மாதம் நடத்திய கருத்தாய்வில் கிட்டத்தட்ட 91 விழுக்காட்டினர் உலக அளவில் திறம்படச் செயல்பட வேண்டுமானால் நீடித்த நிலைத்தன்மை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், 88 விழுக்காட்டினர் செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை ஊழியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும், அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டம் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.