மார்ச் 31ஆம் தேதி ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் செரின் அரண்மனையில் அம்மாநில ஆட்சித் தலைவரான பட்டத்து இளவரசர் இஸ்மாயில் இப்னி சுல்தான் இப்ராஹிம் அளித்த நோன்புப் பெருநாள் விருந்தில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்கும் கலந்துகொண்டனர்.
நோன்புப் பெருநாள் பண்டிகைக் காலத்தில் ஜோகூர் அரச குடும்பத்தின் பொது வரவேற்பில் சிங்கப்பூர் அமைச்சர்கள் கலந்துகொள்வது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு பாரம்பரியமாகும். ஜோகூர் அரச குடும்பத்தினரின் அன்பான விருந்தோம்பலுக்கு அமைச்சர் சான் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
சிங்கப்பூரும் ஜோகூரும் பல்லாண்டுகளாக ஒரு தனித்துவமான நட்பைப் பகிர்ந்து கொள்கின்றன. இரு தரப்பும் பொருளியல் உறவுகளால் மட்டுமல்ல, ஒன்றிணைந்த வரலாறு, மக்களுக்கு இடையிலான ஆழமான உறவு ஆகியவற்றால் பிணைக்கப்பட்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டார் திரு சான்.
கல்வித் துறையிலும் சிங்கப்பூரும் ஜோகூரும் நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றன என்றும் கூறிய அமைச்சர் சான், அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
அமைச்சர்கள் இருவரும் தங்கள் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை ஜோகூர் ஆட்சியாளருக்கும் ஜோகூர் அரச குடும்பத்தினருக்கும் தெரிவித்தனர்.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் மற்றும் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் பெருவிரைவு ரயில் போக்குவரத்து இணைப்பு உள்ளிட்ட முயற்சிகளை விரைவாக செயல்படுத்துவது பற்றியும் அவர்கள் பேசினர்.
இது பன்முகத்தன்மை கொண்ட, வலுவான எல்லை தாண்டிய உறவை மேலும் வலுப்படுத்தும் என்று இருதரப்பினரும் நம்பிக்கை தெரிவித்தனர் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.