காஸா முனை, மேற்குக் கரை, லெபனானுடனான இஸ்ரேலிய எல்லைப் பகுதிகள் ஆகியவற்றுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நடந்து வருவதால் இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அது சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படக்கூடும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
“இஸ்ரேலில் இருக்கும் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். அங்குள்ள நிலவரங்களை மிக உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். இஸ்ரேலிய அதிகாரிகள் நடைமுறைப்படுத்தும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். இஸ்ரேலில் கூட்டம் அதிகம் கூடும் இடங்கள் அல்லது திடீர் அமளி ஏற்படக்கூடிய இடங்களைச் சிங்கப்பூரர்கள் தவிர்க்க வேண்டும்,” என்று வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

