சிங்கப்பூரில் நிகழ்ந்த ஆகப் பெரிய $3 பில்லியன் பணமோசடித் தொடர்பில் கட்டுப்பாடுகளை மீறியதற்காக கிரெடிட் சுவிஸ் (Credit Suisse) (சிங்கப்பூர்க் கிளை), யுஓபி (UOB) ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் $5 மில்லியனுக்கும் அதிகமான அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
2023ஆம் $3 பில்லியன் மதிப்புள்ள கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் வழக்குத் தொடர்பில் அந்த அபராதம் விதிக்கப்பட்டது.
அவற்றுடன் சேர்த்து 9 நிதி நிறுவனங்களுக்குச் சிங்கப்பூர் நாணய ஆணையம் $27.45 மில்லியன் அபராதம் விதித்தது.
ஜூலை 4ஆம் தேதி அபராதங்கள் விதிக்கப்பட்டதாகச் சொன்ன சிங்கப்பூர் நாணய ஆணையம், சம்பவம் நடந்தபோது நிதி நிறுவனங்களில் வேலைசெய்த 18 தனிநபர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் சொன்னது.
2023ஆம் ஆண்டு யூபிஎஸ் நிறுவனத்திடம் கைமாற்றப்பட்ட கிரெடிட் சுவிஸ் நிறுவனத்துக்கு ஆக அதிகமான $5.8 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது செயல்படாத அந்த சுவிஸ் வங்கி, 2017 நவம்பரிலிருந்து 2023 அக்டோபர் வரை அமெரிக்க வாடிக்கையாளர்களின் சார்பில் கணக்குகளை நிர்வகித்தபோது செய்த விதிமீறல்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
கிரெடிட் சுவிஸ் நிதி நிறுவனத்துக்கு அடுத்தப்படியாக யுஓபி நிறுவனம் $5.6 மில்லியன் அபராதத்தை எதிர்கொண்டது. அதையடுத்து யுபிஎஸ் நிறுவனத்துக்கு $3 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.
யுஓபியின் இடைத்தரகு நிறுவனம் கே ஹியன், சொத்துகளை நிர்வகிக்கும் புளூ ஓஷன் இன்வெஸ்ட், சிட்டிபேங் என். ஏ. சிங்கப்பூர், சிட்டிபேங் சிங்கப்பூர் ஆகிய இதர நிதி நிறுவனங்களுக்கும் அபராதங்கள் விதிக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
வாடிக்கையாளர்கள் கொடுத்த ஆவணங்களில் முரண்பாடுகள் இருந்தபோதும் எங்கிருந்து அவர்களுக்குப் பணம் வருகிறது என்பதை நிதி நிறுவனங்கள் சரிவர சோதிக்கவில்லை என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் குறிப்பிட்டது.
நிறுவனங்களின் கட்டமைப்புகளில் எச்சரிக்கை எழுப்பப்பட்டபோதும் ஒன்பதில் எட்டு நிதி நிறுவனங்கள் அந்தச் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை விசாரிக்கவில்லை.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தீவெங்கும் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் $3 பில்லியன் மதிப்புள்ள கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதன் தொடர்பில் 10 வெளிநாட்டினர் கைதுசெய்யப்பட்டனர்.
சீனாவின் ஃபுஜியனைச் சேர்ந்த 9 ஆடவர்களுக்கும் 1 பெண்ணுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்ட அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

