சிங்கப்பூர்ப் நாணய மாற்று வர்த்தகச் சங்கம் தனது 21ஆம் ஆண்டு நிறைவை, இரவு உணவு விருந்துடன் கொண்டாடியது.
சனிக்கிழமை செப்டம்பர் 21ஆம் தேதியன்று மரீன் பரேட் சென்ட்ரலில் உள்ள இஸ்தானா அரங்கில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், ஏறத்தாழ 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நாணய மாற்று வர்த்தகச் சங்கத் தலைவர் வி.எஸ்.ஏ.உமர் உறுப்பினர்களை வரவேற்று சிறப்புரை ஆற்றினார்.
2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தச் சங்கம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
“பல ஆண்டுகளாக சிங்கப்பூர்ப் நாணய மாற்றுத் தொழில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மின்னிலக்க நாணயம் சார்ந்த தொழில்நுட்பப் பரிமாற்றம் எங்களுக்குச் சவாலாக இருந்தபோதிலும், எங்கள் வாடிக்கையாளர்களில் பலருக்கு வழக்கமான நாணயப் பயணம் இன்றியமையாத ஒன்றாகவும் பரிமாற்றத்திற்கான நம்பகமான வழிமுறையாகவும் தொடர்கிறது,” என்றார் திரு உமர்.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் விதிகளின்படி, பணமோசடித் தடுப்பும் சட்டபூர்வ இணக்கப் பயிற்சியும் ஆண்டுதோறும் சங்க உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், உள்துறை துணை அமைச்சரும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் வி.எஸ்.ஏ.உமர், துணைத் தலைவர் ஒளி முஹம்மது, இரண்டாவது துணைத் தலைவர் சையத் ஹபீப், நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் ஹாஜி முகமத் ரபீக் ஆகியோர் சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சி மேடையில் உரையாற்றிய டாக்டர் ஃபைஷால், பொதுவாகப் நாணய மாற்று வர்த்தகர்களுக்கு அரசாங்கம் இயன்றவரை ஒத்துழைப்பு கொடுக்கும் என்று கூறினார். மேலும், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது தொடர்பான குற்றச்செயல்களைப் பற்றி நாணயமாற்று வர்த்தகர்கள் நன்கறிந்துகொண்டு, முறையற்ற வழியில் ஈட்டப்பட்ட பணத்தைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
நாணய மாற்றுத் தொழிலின் முன்னோடிகளாக சங்கம் அடையாளம் கண்ட சுமார் 16 வர்த்தகர்களுக்கு முன்னோடி விருதுகள் வழங்கப்பட்டன.
அத்துடன், சங்கத்தின் புதிய சின்னமும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.