ஆசியாவில் ஆக அமைதியான நாடு சிங்கப்பூர்

ஆசியாவில் ஆக அமைதியான நாடு சிங்கப்பூர்

2 mins read
ab8efde2-39f4-40c7-87b5-1e994082b338
அமைதியான நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலக அளவில் அமைதியான நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜூன் 9ஆம் தேதி வெளியிடப்பட்ட இவ்வாண்டுக்கான உலகளாவிய அமைதிக் குறியீட்டு அறிக்கையின்படி ஆசியாவில் ஆக அமைதியான நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் வந்தது.

2007ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் அந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. அதன்படி, சிங்கப்பூர் 1.435 குறியீட்டைப் பெற்றது. 23 காரணிகளின் அடிப்படையில் அந்தக் குறியீடு கணக்கிடப்படுகிறது. ஆகக் குறைவான எண்ணிக்கையைப் பெறும் நாடு ஆக அமைதியான நாடாகக் கருதப்படும். அதன் அடிப்படையில், ஆக அமைதியான ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் முதலிடத்தில் வந்தது. அதைத்தொடர்ந்து, ஜப்பானும் மலேசியாவும் வந்தன.

உலக நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 19வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது ஐஸ்லாந்து. அது 1.161 குறியீட்டைப் பெற்றது. அதையடுத்து வந்த நியூசிலாந்து 1.343 குறியீட்டையும் சுவிட்சர்லாந்து 1.363 குறியீட்டையும் பெற்றன.

ர‌ஷ்யா 3.367 குறியீட்டைப் பெற்று அமைதி குறைவான நாடாக வரிசைப்படுத்தப்பட்டது. சூடான், காங்கோ ஆகியனவும் அமைதி குறைந்த நாடுகளாக வந்தன. உலக அமைதிக் குறியீட்டைக் கணக்கிடும் ஆஸ்திரேலியாவின் பொருளியல், அமைதி ஆய்வுக் கழகம் 163 நாடுகளிலும் எல்லைகளிலும் உள்ள அமைதியையும் நிலைத்தன்மையையும் மதிப்பிடுகிறது.

உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 99.7 விழுக்காட்டினரிடம் கருத்துகள் திரட்டப்படுகின்றன.

உள்ளூர், வெளிநாட்டுப் பூசல்கள், சமூகப் பாதுகாப்பு, ராணுவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைதி குறியீடு மதிப்பிடப்படுகின்றன.

உலக அளவில் நிலவும் அமைதி குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாகவும் ஆய்வு சுட்டியது. கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 0.7 விழுக்காடு குறைந்தது.

தொடர்ந்து 12வது ஆண்டாக அமைதி உலக அளவில் குறைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
பட்டியல்தரவரிசைசிங்கப்பூர்