தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய சாலை விபத்தில் சிங்கப்பூர் மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழப்பு

1 mins read
3ca4ffa2-30e0-4705-90b0-8455c3901daf
விபத்தையடுத்து சாலையில் விழுந்து கிடந்த மோட்டார்சைக்கிள். - படம்: ஃபரிஸதுல் ஃபிர்தௌஸ் / ஃபேஸ்புக்

ஜோகூர் பாரு: மலேசியாவின் இரண்டாம் பால விரைவுச்சாலையில் (Second Link Expressway) ஜனவரி 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேர்ந்த விபத்தில் சிங்கப்பூர் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.

மாண்டவர் திரு இர்வான் அரிஃபின், 49, என அடையாளம் காணப்பட்டது.

அன்று மாலை 4.30 மணியளவில் சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்தபோது அவரது மோட்டார்சைக்கிள் ஒரு காரின் பின்புறம் மோதியது. அதனால், அந்த கார் இன்னொரு காரின்மீது மோத நேரிட்டதாக இஸ்கந்தர் புத்ரி காவல்துறைத் தலைவர் எம். குமரேசன் தெரிவித்தார்.

மோதிய வேகத்தில் சாலையோரத் தடுப்பின்மீது விழுந்த அரிஃபினுக்குக் கழுத்தில் கடுமையான காயம் ஏற்பட்டது.

ஜோகூர் பாருவிலுள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட வழியில் அவரது உயிர் பிரிந்தது. இரண்டு கார் ஓட்டுநர்களுக்கும் காயம் ஏற்படவில்லை.

மாண்ட அரிஃபினின் உடல் சிங்கப்பூரிலுள்ள அவரது வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. திங்கட்கிழமையன்று நடைபெற்ற துக்க அனுசரிப்பில் குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்துகொண்டனர். பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அரிஃபினுக்கு மோட்டார்சைக்கிள் ஓட்டுவதற்கு மிகவும் பிடிக்கும் என்றும் அச்செயலில் ஈடுபட்டிருந்தபோதே அவர் இவ்வுலகைவிட்டுச் சென்றுவிட்டார் என்றும் அவருடைய உறவினர் ஒருவர் சொன்னார்.

விபத்திற்குப் பிந்திய காணொளி இணையத்தில் பகிரப்பட்டது. அதில் மோட்டார்சைக்கிள் ஒன்று விழுந்து கிடந்ததையும் இரு கார்கள் சேதமடைந்திருந்ததையும் காண முடிந்தது.

குறிப்புச் சொற்கள்